தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 09) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருநாளுக்கு ஆயத்தம்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தொழுகைக்கு செல்வதற்காக, அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து, வாசனைத் திரவியங்களைத் தேய்த்துக் கொண்டவர்களாக பொதுமக்கள் அவரவர் மஹல்லா ஜமாஅத்திலுள்ள பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகையில் கலந்துகொண்டனர்.
தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்கள்:
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, தாயிம்பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி, செய்கு ஹுஸைன் பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி, மேலப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, ஜாவியா, சிறிய குத்பா பள்ளி, பெரிய குத்பா பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, கற்புடையார் பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஆகிய பள்ளிகளில், இன்று காலை 07.30 மணி முதல் 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அந்தந்த பள்ளிவாசல்களின் இமாம்கள் தொழுகையை வழிநடத்தினர். பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் அந்தந்த ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
திக்ர் மஜ்லிஸ்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 08ஆம் தேதி) இரவில் அனைத்து நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை:
காயல்பட்டினம் மஸ்ஜித் மவ்ரிதில் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில் இன்று காலை 09.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ குத்பா பேருரையாற்றினார்.
கட்டிட புதுப்பிப்புப் பணி:
பின்னர், பள்ளியின் பழுதடைந்துள்ள கீழ்ப்பகுதியை உடைத்துக் கட்டிட, பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகைக்காக மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாராள நன்கொடைகளை வழங்கிடுமாறும், பள்ளியின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோளை முன்வைத்தார்.
‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
கலந்துகொண்டோர்:
இத்தொழுகையில், பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், அதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் உறுப்பினர்களான கானாப்பா செய்யித் அஹ்மத், எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.பாதுல் அஸ்ஹப், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் நூஹ் உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
கண்களைக் கவர்ந்த குழந்தைகள்:
சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
மக்கள் திரள்:
வழமைக்கு மாற்றமாக, இவ்வாண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்காக, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஊர் வந்திருந்தமையால், பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை சேகரிக்கப்பட்டது.
ஜியாரத் நிகழ்ச்சி:
பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை:
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களில் பெண்களுக்கு தனியாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தற்காலிக ஆண் இமாம்கள் ஆண்கள் பகுதியிலிருந்தவாறு தொழுகையை வழிநடத்த, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அவர்களுக்கான பகுதியில் இருந்தவாறு தொழுகையில் கலந்துகொண்டனர்.
கடற்கரையில் மக்கள் கூட்டம்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் மக்கள் மிக அதிகளவில் திரண்டு செல்வர். |