தூத்துக்குடியில் உள்ள கனிம வளம் மற்றும் சுரங்கங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சிறப்புக் குழுவை தமிழக முதல்வர் அமைத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் வேம்பாறு, வைப்பாறு கடற்கரை பகுதிகளில் சட்டத்துக்கு விரோதமாக கார்னெட் மணல் சுரண்டப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்து, ஒரு விளக்கக் குறிப்பை தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். அதனை பரிசீலித்த தமிழக அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதாவது, தூத்துக்குடியில் உள்ள கனிம, மண் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்படும். இதில், காவல்துறை, வருவாய், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருப்பர்.
இக்குழுவினர், தூத்துக்குடியில் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 சுரங்கங்களில் இருந்து கார்னெட் மணல் முறைகேடாக அள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வார்கள். அக்குழுவுக்கு கனிம வளத்துறை சட்டம் 1957 பிரிவு 24ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
இந்த சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி முடிக்கும் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னெட் மணல் அள்ளவோ, அப்பகுதிகளில் மணல் கொண்டு செல்லவோ தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.
தூத்துக்குடி பகுதியில் சிறப்பு குழுவினர் சுமார் ஒரு மாத காலம் ஆய்வு செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தகவல்:
தினமணி
|