சிங்கப்பூரில் இம்மாதம் 08ஆம் தேதியன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்று மாலை 18.00 மணியிலிருந்தே உறுப்பினர்கள் தம் மனைவி - மக்களுடன் நிகழ்விடம் வந்து சேரத் துவங்கினர். துவக்கமாக, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம் பரிமாறப்பட்டது.
இஷா நேரத்தையடைந்ததையடுத்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இஷா தொழுகையை வழிநடத்த, அனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாக) பின்தொடர்ந்து நிறைவேற்றினர்.
பின்னர், வழமை போல உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் உறை வழங்கப்பட்டது. அதில் அவர்கள் - மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக பெருநாள் நன்கொடையை வழங்கினர். இதன்மூலம் மொத்தம் இந்திய ரூபாய் 40 ஆயிரம் சேகரிக்கப்பட்டு, மன்றத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
நிறைவாக, இரவுணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. பிரியாணி, நெய்ச்சோறு, வெறுஞ்சோறு, களறி கறி, மாங்காய் கறி, இறால், கனவா மீன் (Squid), சிக்கன் 65, ரசம் என சுவையும் - மணமும் கொண்ட பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தது. பஃபே முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த விருந்தில், அனைவரும் தமக்கு விருப்பமான உணவுப் பதார்த்தங்களை ஆசை தீர உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் சிறிது நேரம் அரட்டையில் ஈடுபட்ட அனைவரும், இரவு 22.30 மணியளவில் தமது வசிப்பிடம் திரும்பிச் சென்றனர். அழைப்பையேற்று வருகை தந்தமைக்காக, மன்ற ஆலோசகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத், சிங்கப்பூர் ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, பெங்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம், மஸ்ஜித் அப்துல் கஃபூர் (டன்லப்) பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ, ரமழானை முன்னிட்டு சிங்கை சென்றுள்ள - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ உள்ளிட்டோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், மன்ற உறுப்பினர்கள் தம் மனைவி - மக்களுடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்
காயல் நல மன்றம் - சிங்கப்பூர்
சிங்கை காயல் நல மன்றம் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரா 1434) நடைபெற்ற நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |