ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் சார்பில், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 08.30 மணியளவில், சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், வழமை போல இவ்வாண்டும் ஒருங்கிணைந்த முறையில் உள்ஹிய்யாவை நிறைவேற்றிட தீர்மானிக்கப்பட்டதுடன், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2000/- என தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்கு சேர விரும்புவோர், அலியார் தெருவிலுள்ள அப்பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
S.ஷம்சுத்தீன்
தலைவர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை |