புன்னைக்காயலில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி இறுதிப்போட்டியில் வென்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விபரம் வருமாறு:-
அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான - மாவட்ட அளவிலான 40ஆவது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில், புனித வளனார் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், நாசரேத் மர்காஷிஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் ஈரணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், அவை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், நாசரேத் அணி 1 கோலும், காயல்பட்டினம் அணி 2 கோலும் அடித்தன. பின்னர், ஆட்டம் நிறைவடையும் வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், 2-1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஊர் தலைவர் குழந்தை மச்சாது, துறைமுக கமிட்டி தலைவர் சகாயராஜ் பர்னாந்து, மீனவ சொஸைட்டி உப தலைவர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புன்னைக்காயல் நகர பங்குத் தந்தை தோமாஸ் அடிகளார் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
துவக்கமாக, இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும் தனிப்பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் வீற்றிருந்தோர் அப்பரிசுகளை வழங்கினர்.
பின்னர், இரண்டாமிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் அணிக்கு - வெற்றிக்கு முனைந்த அணிக்கான சுழற்கோப்பையையும், இறுதிப் போட்டியில் வென்று முதலிடம் பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு வெற்றி பெற்ற அணிக்கான - அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பையையும், விழா தலைவர் பங்குத் தந்தை தோமாஸ் அடிகளார் வழங்கினார்.
புனித வளனார் மேநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரொங்காலி சில்வா நன்றியுரையுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது.
இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், புன்னைக்காயல், நாசரேத், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஜோஸப் (புன்னைக்காயல்)
படங்கள்:
இப்றாஹீம் ஃபைஸல்
மற்றும்
இம்ரான் உஸைர்
கடந்தாண்டு நடைபெற்ற அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியிலும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியே வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |