கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) தொடர்பாக காவல்துறையால் மேற்கொள்ளப்படும் விசாரணைப் பணிகளில் காணப்படும் சிரமங்கள் மிகுந்த கவனத்துடன் சரிசெய்யப்படும் என, காயல்பட்டினம் ஜலாலிய்யாவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய - ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் கூறியுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தை உள்ளடக்கிய ஆறுமுகநேரி சரக காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் டி.பார்த்திபன். இவர் காவல் துறையில் சிறப்புற பணியாற்றியமைக்காக, இம்மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
இதனைப் பாராட்டி, காயல்பட்டினம் ஜலாலிய்யா சங்கம், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), கற்புடையார் பள்ளி நிர்வாகங்களின் சார்பில், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் சிற்றரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி விழாவிற்குத் தலைமை தாங்கினார். மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி என்ற துரை, அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி, விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விழா தலைவர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், அண்ணா பதக்கம் பெற்ற ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், கற்புடையார் பள்ளியின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.சி.) சார்பில், அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில், அதன் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி, மஸ்ஜித் மீக்காஈல் சார்பில், அதன் தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி என்ற துரை, காவல்துறை ஆய்வாளருடன் படித்த மாணவர்கள் சார்பில், எஸ்.ஏ.ஆர்.யூனுஸ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
பின்னர், காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஏற்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
எனது சொந்த ஊர் திசையன்விளை. எனினும், நான் படித்தது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியிலும்தான். எனவே, இப்பகுதி எனக்குப் புதிதல்ல.
பள்ளிப்படிப்பின்போது நான் ஒரு கடைநிலை மாணவனாகவே இருந்து வந்தேன்... ஆங்கில மொழியில் கூட எனக்கு அவ்வளவாகப் புலமை கிடையாது... இன்னும் சொல்லப்போனால், மூன்று முறை ஃபெயில் ஆகியவன் நான்.
எனினும், நமது இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் “கனவு காணுங்கள்” என்று சொன்னதற்கேற்ப, எனக்கும் பள்ளிப் பருவத்திலேயே ஒரு போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக வரவேண்டும் என்ற கனவு இருந்து வந்தது.
ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்த நிலையில், கல்லூரியின் இறுதி நாள் விழாவில், “நான் என்னவாகப் போகிறேன்...?” எனும் தலைப்பில் மாணவர்கள் சிலர் உரையாற்றினர். சப் இன்ஸ்பெக்டராகி, நாட்டு மக்களுக்கு பணியாற்றப் போகிறேன் என அந்நிகழ்ச்சியில் நானும் பேசி, அதற்காக பரிசும் பெற்றேன்.
என்னை ஒரு முழு மனிதனாக்கிய பெருமை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் சேரும். இவ்விரு கல்லூரிகளுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
அப்பா கல்லூரியில் நான் பயின்றபோது, என்னுடன் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்களுள் எட்டு பேர் முஸ்லிம்கள். இதனால், முஸ்லிம்களோடு ஒன்றிப் பழகும் வாய்ப்பு எனக்கு அன்றே கிடைத்துவிட்டது. தொழுகைக்காக அழைக்கும் பாங்கு எனக்கு இன்றும் மனப்பாடமாக உள்ளது.
இந்த பாராட்டு விழாவில் பேசிய விழா தலைவர் முன் வைத்த கோரிக்கையான பாஸ்போர்ட் வெரிஃபிக்கேஷன் சம்பந்தமாக, உள்ளூர்வாசிகள் - குறிப்பாக பெண்கள் மற்றும் வயோதிகர்கள் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதாகக் குறிப்பிட்டனர். அதை நானும் பல முறை பார்த்திருக்கின்றேன்.
“அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து, காக்க வைக்காமல் உடனே அனுப்பி வையுங்கள்‘” என எனது சக பணியாளர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இனி அந்தச் சிரமம் ஏற்படாமல் மிக கவனமாகப் பார்த்துக்கொள்வேன்... காயல்பட்டினம் மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்...
இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்து, இந்த எளியவனைப் பாராட்டியமைக்கு உங்கள் யாவருக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் காரணமாக உள்ள இந்த உயரிய விருதை வழங்கிய நம் தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.
தென் மாவட்டங்களான மூன்று மாவட்டங்களில், நம் மாவட்டத்தைச் சார்ந்த எனக்கு இவ்விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது,..
இவ்வாறு அவர் பேசியதோடு, தான் பெற்ற - தமிழக அரசின் அண்ணா பதக்கம் மற்றும் காசோலையைக் காண்பிக்க, பார்வையாளர்கள் ஆவலுடன் அவற்றைப் பார்த்தனர்.
நன்றியுரையைத் தொடர்ந்து, மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் மவ்லவீ முஹம்மத் ஹஸன் துஆ பிரார்த்தனையுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அண்ணா பதக்கம் பெற்ற காவல்துறை ஆய்வாளரை, நிகழ்விடமான ஜலாலிய்யா வளாகத்தின் முன் நகரப் பிரமுகர்கள் காத்திருந்து வரவேற்றனர்.
தகவல், களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றமைக்காக, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனைப் பாராட்டி, ஆறுமுகநேரி நகர பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பலரும் அதில் கலந்துகொண்டனர்.
அதுபோல, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்ட நிறைவில், நகர்மன்றத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தப்பட்டது.
காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் சார்பில் பாராட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. |