தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கும், எனவே சட்டத்தினை யாரும் கையில் எடுக்க கூடாது என ஆட்சியர் ரவி குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி்ல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் ரவிகுமார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாது:
தூத்துக்குடி மாவட்டத்தில் யார், எந்த தவறு செய்தாலும், மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
எனவே சட்டத்தினை யாரும் தங்களது கையில் எடுத்துக்கொண்டு அவர்களே தீர்ப்பு கூறக்கூடாது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியதாழையில் ஒரு லாரியை சிறைபிடித்தனர். இதில் 24 டன்னுக்கு பதிலாக 41 டன் தாது மணல் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு, லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது.
கனிம மணல் அள்ளுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 8ம் தேதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் நகல் 14ம் தேதி தான் எங்களுக்கு கிடைத்தது. அன்று முதல் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனுமதியின்றி பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை, பொதுமக்கள் பிடித்தால் உடனடியாக கோட்டாட்சியர் அல்லது போலீசார் அல்லது கனிம வளத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
டிசிடபிள்யூ ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதன் அறிக்கை ஓரிரு நாளில் கிடைக்கும்.
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் சார்பில் தனித்தனியே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வருகிற 5ம் தேதி ஆய்வு செய்து அறிக்கையினை அரசிடம் அளிப்பார்கள்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக சென்னையில் நடந்த ஜூனியர் ஸ்குவாஷ் சேம்பியன் ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி பிருந்தா மற்றும், பள்ளிகளுக்கு இடையேகான போட்டிகளுக்கு சப் ஜூனியர் பிரிவில் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவன் யூஜின் சிப்போரிக்கு ஆட்சியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர் குமார், விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம், ஸ்குவாஷ் பயிற்றுனர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.com
|