மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையிலான குழுவினர், இன்று (செப்டம்பர் 02) காலையில் காயல்பட்டினம் கடைவீதிப் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
எல்.கே.துவக்கப்பள்ளி அருகிலுள்ள ஹோட்டல் உணவகத்திற்கருகில் சுகாதாரக் கேடான நிலையிலிருந்த பகுதிகளைக் கண்ட அவர்கள், ஹோட்டல் உரிமையாளர்களிடம் எச்சரித்ததையடுத்து, அவர்கள் உடனடியாக அவற்றை சுத்தப்படுத்தினர்.
அதுபோல, கூலக்கடை பஜாரிலுள்ள பலசரக்கு மளிகையொன்றில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்களுள் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அக்கடைக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி, காலாவதியான பொருட்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
காயல்பட்டினத்தில், பெரிய அளவிலான திடீர் சோதனை விரைவில் நடத்தப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே அதிகாரி தலைமையிலான குழுவினர் கடந்த ஜூன் மாதம் 03ஆம் தேதியன்று காயல்பட்டினத்திலுள்ள பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தி, காலாவதியான மற்றும் அனுமதி பெறாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்களையும், பான் பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களையும் கைப்பற்றி, நகராட்சிக்குட்பட்ட உரக்கிடங்கிலிட்டு அழித்தனர். இதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |