தூத்துக்குடியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அவசரம் அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதில் 2 எம்எல்ஏக்கள் உட்பட 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சென்னை - தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் தினமும் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், சமக எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், தூத்துக்குடி வஉசி துறைமுக சபை தலைவர் நடராஜன் உட்பட 67 பயணிகள் வந்தனர்.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென புகை பரவியது. இதனால் பயணிகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டது. இதனை அறிந்த பைலட் கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக 3 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
பைலட்டின் சாமர்த்திய நடவடிக்கையால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. உடனடியாக பயணிகள் அவசர அவசரமாக பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். பின்னர் விமானத்தின் தீப்பிடித்த பகுதி அணைக்கப்பட்டது. விமானத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விமானத்தின் முன்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பயணிகள் ஆபத்து எதுவும் இன்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்
அவசரத் தேவைகளுக்காக, காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன் (துபை)
|