காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்ட கலந்தாய்வுக் கூட்டம் 28.08.2013 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில், நூலக தன்னார்வலர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
ரியாத் காயல் நற்பணி மன்ற உறுப்பினர் இப்றாஹீம் ஃபைஸல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நூலக புரவலரும், பணி நிறைவு பெற்ற சுகாதார ஆய்வாளருமான காயல் ஏ.கருப்பசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நூலக கட்டிட விரிவாக்கப் பணிகள் குறித்தும், அப்பணிகளை விரைவுபடுத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும் - நூலக புரவலரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் விளக்கிப் பேசினார்.
புரவலர்கள் கருத்துரை:
நூலகப் புரவலர்களான - வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், எல்.டி.முஹம்மத் இப்றாஹீம், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ, காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கவிஞர் எஸ்.ஷேக் அப்துல் காதர், ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தலைமையுரை:
கூட்டத் தலைவர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் தலைமையுரையாற்றினார்.
நூலக கட்டிட விரிவாக்கப் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வுக்கான காரணம் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
தன்னார்வலர்கள் கருத்து:
நூலக கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கான நிதி தேவையைக் கருத்திற்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டு காயல் நல மன்றங்களின் அங்கத்தினரான முத்துவாப்பா, இப்றாஹீம் ஃபைஸல், ஃபைஸல் அஹ்மத், இம்ரான், நூர் முஹம்மத், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆகியோர், தங்களாலியன்ற நன்கொடைத் தொகையை நூலக தன்னார்வ அமைப்பிடம் வழங்குவதாகவும், தாம் சார்ந்துள்ள காயல் நல மன்றங்களுக்கு முறைப்படி வேண்டுகோள் வைக்கப்பட்டால், அதுகுறித்து மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, கூடுதல் நன்கொடைகளைப் பெற்றிட உறுதுணை புரிவதாகவும் கூறினர்.
புதிதாக புரவலர்கள் இணைவு:
இக்கூட்டத்தில், ‘ஸ்டார் ரெடிமேட்ஸ்’ உரிமையாளர் ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ஏ.எஸ்.புகாரீ, எஸ்.எம்.எஸ்.நூர் முஹம்மத், எஸ்.ஐ.முஹம்மத் ஃபாஸீ ஆகியோர் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி, நூலக புரவலர்களாக தம்மை இணைத்துக்கொண்டனர்.
காயல்பட்டினம் அரசு நூலக நூலகர் அ.முஜீப் நன்றி கூற, துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், நூலக வாசகர் வட்ட அங்கத்தினரும், தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.
தகவல்:
அ.முஜீப்
நூலகர்
அரசு பொது நூலகம் - காயல்பட்டினம் |