‘நத்தம்’ நிலம் தொடர்பான விவரங்கள் கணினிமயமாக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா .70 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில் உள்ள நில உடமையாளர்கள் வைத்துள்ள நிலத்தின் அளவு, எல்லை, உபயோகம், உரிமையாளர் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை துல்லியமாக
பராமரிப்பதற்கும், அரசு நிலங்களை நிருவகிப்பதற்கும் தோற்றுவிக்கப்பட்ட துறை தான் நிலநிருவாகத் துறையாகும். இந்தத் துறையின் மூலம், மாநிலத்தில் உள்ள நிலங்கள் பற்றிய விவரங்கள் கணினிப்படுத்தப்பட்டு, நில விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்வதற்கும், பட்டா மாறுதல் போன்ற பணிகளை விரைந்து செயல்படுத்தப்படவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மக்களிடமிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் விண்ணப்பங்களின் மீது விரைவாக
நடவடிக்கை எடுக்கும் வகையில், பட்டா மாறுதலுக்கான முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதன்படி “விரைவு பட்டா மாறுதல் திட்டம்” என்ற ஒரு புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள கிராம நிருவாக அதிகாரியிடம் அளித்தால் போதுமானது. இம்மனுக்கள் வாரந்தோறும் கிராம நிருவாக அதிகாரியால் அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை அன்று பெறப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வருவாய் கணக்குகளில் தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.
தற்பொழுது மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை தோறும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாற்றம் செய்யும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பட்டா மாறுதலுக்காக பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள நிலங்களின் விவரங்கள், ‘அ’ பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு ‘தமிழ் நிலம்’ என்ற மென்பொருள் வழியாக தற்போது பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்கள், நத்தம் நிலம் தொடர்பான விவரங்கள் கணினிமயமாக்கப்படவில்லை.
தற்பொழுது தமிழ்நாட்டில் நத்தம் நிலம் தொடர்பான 1 கோடியே 35 லட்சம் உட்பிரிவுகள் உள்ளன. இதன் விவரங்கள் கணினிமயமாக்கப்பட வேண்டியது மிகவும்
அவசியமாகும். எனவே நத்தம் நிலம் சம்பந்தமான விவரங்களை கணினிமயமாக்கும் பணிகளை வெளி ஆதாரம் (Out Sourcing) மூலம் நிறைவேற்ற 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ‘நத்தம்’ நிலம் தொடர்பான விவரங்கள் கணினிமயமாக்கப்பட்டபின் பொதுமக்களுக்கு விரைவாக கணினி வழியாக ‘நத்தம்’ பட்டாக்கள் வழங்க இயலும்.
தற்பொழுது COLLABLAND என்ற மென்பொருள் மூலமாக 29 மாவட்டங்களில் உள்ள வட்ட நில அளவை அலுவலகங்களில் உள்ள 53 லட்சம் புலப்படங்களில், இதுவரை 14 லட்சம் புலப்படங்கள் கணினிப்படுத்தப்பட்டுள்ளன.
இணையம் சார்ந்த மென்பொருளை கொண்டு நில ஆவணங்கள் (Web based Software for online Management of Land Records) பராமரிக்கப்பட்டால் நில ஆவணங்கள் பராமரிப்பது எளிதாக இருக்கும். இதன்படி, வட்ட அலுவலக மூலக் கணினியில் உள்ள நில ஆவண தரவுகள் அனைத்தும் மத்திய மூலக் கணினிக்கு கொண்டு செல்லப்பட்டு, வட்ட அலுவலகப் பணியாளர்கள் கடவுச் சொல்லை பயன்படுத்தி இணையம் மூலமாக மத்திய மூலக் கணினியிலுள்ள தகவல்களை பயன்படுத்த இயலும்.
எனவே, தங்கள் பணிகளை விரைந்து ஆற்ற வசதியாகவும், கணினிப்படுத்தப்பட்டுள்ள புலப்படங்களை எளிதாக பயன்படுத்த ஏதுவாகவும், இணையம் சார்ந்த முறையில் நில ஆவணங்களை பராமரிக்க ஏதுவாகவும், அனைத்து குறுவட்ட அளவர்களுக்கும் மடிக்கணினி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன் முதற்கட்டமாக சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 75 குறுவட்டங்கள் வீதம் 300 குறுவட்ட அளவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க 83 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
வட்டாட்சியர் அலுவலகங்களில் நில பரிவர்த்தனை தொடர்பான பட்டா மாற்றம் நடவடிக்கைகள் சம்பந்தமாக நிலங்களை அளப்பது, ஆவணங்களை தயாரிப்பது போன்ற நில நிருவாகம் சம்பந்தமான பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள் உள்வட்ட அளவர்கள் (Firka Surveyors) ஆவார்கள். இவர்களின் பணி மேலும் மேம்பாடு அடைவதற்காகவும், பணிகள் நிமித்தமாக உடனுக்குடன் கைபேசியின் மூலமாக தொடர்பு கொள்ள வசதியாக 'Closed User Group’ வசதி ஏற்படுத்தி ஒவ்வொரு உள்வட்ட அளவர்களுக்கும் ஒரு சிம் கார்டு வழங்குவதற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா
அவர்கள் உத்தரவிட்டார்கள். இதன் மூலம் அரசுக்கு 13 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். இதனால் 1,138 உள்வட்ட அளவர்கள் பயன் பெறுவர்கள்.
நிலநிருவாகத் துறையில் அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகள் மூலம் நில ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, நிலங்கள் பற்றிய
விவரங்களை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ள வழிவகை ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9.
|