தரை மட்டத்திலிருந்த கிணற்றில் தவறி விழுந்த பசுவை, திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர் போராடி, உயிருடன் மீட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சிவன் கோயில் தெருவையடுத்து வடக்கே அமைந்துள்ள திருவள்ளுவர் தெருவில் சுண்ணாம்புத் திரடு பகுதியில், முன்பு பிரேத பரிசோதனைக் கூடம் அமைந்திருந்த இடத்திற்கருகில் இரண்டு கிணறுகள் உள்ளன. சாலையோரத்திலுள்ள முதல் கிணறு தரை மட்டத்தில் அமைந்துள்ளது. இது பயன்பாடற்ற பாழடைந்த கிணறாகும்.
அதற்கு சற்று உள்ளே – சுண்ணாம்பு உற்பத்திக் கலன் அருகில் அமைந்துள்ள இரண்டாவது கிணறு தரைக்கு மேல் ஒரேயொரு கிணற்று உறை அமைக்கப்பட்ட நிலையில் தாழ்வாக அமைந்துள்ளது. அது பயன்படுத்தப்படும் கிணறு.
நேற்று மாலையில், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு, தரையோடிருந்த கிணற்றருகில் வந்தபோது கால் தவறி உள்ளே விழுந்துவிட்டது.
சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்ற ஒருவர், கிணற்றுக்குள் பசு கிடப்பதைப் பார்த்து, அருகிலிருந்த கவுதிய்யா சங்க அங்கத்தினரிடம் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மூலமாக திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
மாலை 06.30 மணியளவில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளர் நட்டார் ஆனந்தி தலைமையிலான வீரர்கள் நிகழ்விடம் வந்தடைந்தனர். தனது இடுப்பில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் ஒரு வீரர் இறங்க, மற்ற வீரர்கள் கயிற்றைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். கிணற்றுக்குள் இறங்கிய வீரர், பசுவைத் தூக்கும் வகையில் அதன் உடலைச் சுற்றி கயிற்றை வளையமிட்டு கட்டிய பின் அதிலிருந்து வெளியேறினார். பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்து கயிற்றைத் தூக்கி பசுவை உயிருடன் மீட்டு தரையில் இட்டனர்.
வெறும் 3 அடி அகலமே கொண்ட அக்கிணற்றுக்குள் அதை விட அதிக அகலம் கொண்ட இப்பசு நீண்ட நேரம் சுருண்டு கிடந்த காரணத்தால் அதன் கழுத்து நிமிர்த்த முடியாமல் வளைந்தே காணப்பட்டது. வால் பகுதியில் இரத்தம் கசிந்தது. வலது கண் நீல நிறத்தில் மாற்றம் கண்டிருந்தது. வேதனை தாங்காமல் அதன் கண்களிலிருந்தும், வாயிலிருந்தும் நீர் வழிந்துகொண்டிருந்தது. கிணற்றுக்குள் விழுந்தபோது ஏற்பட்ட சிராய்ப்பு காரணமாக அதன் தோல் கிழிந்து, தசை வெளியே தெரிந்தது. கால் எலும்பு இடம் மாறி இருந்தது.
மீட்ட பசுவுக்கு பொதுமக்கள் நீர் புகட்டியதுடன், அதன் உடலிலும் தண்ணீர் தெளித்தனர். எனினும் அதனால் எழுந்து நிற்க இயலவில்லை.
இந்நிகழ்வு காரணமாக அப்பகுதி நீண்ட நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி இந்நிகழ்வின்போது உடனிருந்தார். பாழடைந்த கிணற்றை மூடுமாறு அவரிடம் பொதுமக்கள் கூறினர்.
(இதுகுறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!) |