விநாயக சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் பகுதியிலுள்ளோர் இம்மாதம் 15ஆம் தேதியன்று விநாயகர் சிலைகளைக் கரைக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:-
விநாயக சதுர்த்தி விழா 09.09.2013 அன்று நடைபெறவுள்ளது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளதால், முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தளவில், கோவில்பட்டி, எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விநாயகர் சிலை பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பினர், வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுவாக 11.09.2013 அன்று கரைத்திடவும், இதர பகுதிகளான தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொதுவாக 15.09.2013 அன்று விநாயகர் சிலைகளைக் கரைத்திடவும், விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி - சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|