ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் பின்வருமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்:-
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு, அவர்களது ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, பட்டா வழங்கும் திட்டம் அரசால் 30.09.2013 வரை நீட்டித்து ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, நீர்நிலை புறம்போக்கு, மயான புறம்போக்கு போன்ற தடை செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர்த்து இதர அரசு புறம்போக்கு நிலங்களில் 01.06.2007க்கு முன்னர் வீடு கட்டி குடியிருந்து வருவோருக்கு, ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி - தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலரால் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
இதில் விடுபட்டுள்ளதாக அறியப்படும் நபர்கள், 06.09.2013 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை - சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியரிடம் நேரில் மனுச் செய்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |