காட்டு மகுதூம் பள்ளியில் நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது குறித்து கலந்தாலோசிப்பதற்காக, இம்மாதம் 04ஆம் தேதி புதன்கிழமையன்று, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு ஜமாஅத் சார்பிலும் இருவரை அக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும், காட்டு மகுதூம் பள்ளிவாசல், மஹான் அஸ்ஸெய்யிது முத்து மொகுதூம் ஷஹீத் மதனி ஒலி (ரலி) அவர்கள் தர்ஹா ஷரீஃப் ஆலோசனைக் குழுவின் சார்பில், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் நமது காட்டு மொகுதூம் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பை தன் கையகப்படுத்தி, சென்ற 09.01.2008இல் உத்தரவு பிறப்பித்தது. அன்று முதல் நெல்லை மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர் இதன் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். நிர்வாக வசதிக்காக ஐவர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு வக்ஃப் வாரியத்தால் நியமனம் செய்யப்பட்டது.
அதில் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி அவர்கள், ஹாஜி சொளுக்கு முஹம்மது இஸ்மாயில் (முத்து ஹாஜி) அவர்கள், ஹாஜி பிரபு எம்.ஏ.சுல்தான் அவர்கள், ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூது நெய்னா ஆகியோர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
காட்டு மொகுதூம் பள்ளி நிர்வாகப் பொறுப்பை, வக்ஃப் வாரியம் கையகப்படுத்தி ஐந்தரை வருடங்களுக்கு மேலாகிவிட்டன. சுயமாக செயல்படுவதற்கு இதற்கென நிர்வாக அமைப்பு இதுவரையும் அமைக்கப்படவில்லை.
மேற்படி பள்ளிவாசலுக்குரிய நிலங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் வருமானங்களைப் பெருக்குவதற்கும் திறமையான நிர்வாக அமைப்பு மிகவும் அவசியமாகும்.
எனவே, நிர்வாக அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 04.09.2013 (புதன்கிழமை) மாலை ஐந்து மணிக்கு, காட்டு மொகுதூம் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் ஜமாஅத் சார்பில் இரண்டு நபர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படியாக அன்புடன் வேண்டுகிறோம்.
வஸ்ஸலாம்.
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |