உள்ளூர் இணையதளத்தின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் பயிற்சிப் பட்டறையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தைச் சேர்ந்த உள்ளூர் இணையதளத்தின் சார்பில், “U too a Reporter” எனும் தலைப்பில், செய்தியாளர் பயிற்சி முகாம், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரிலுள்ள அன்னை கதீஜா மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
முன்னரே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இம்முகாமில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை நடத்திய உள்ளூர் இணையதளத்தின் செய்தியாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அறிமுகவுரையாற்றினார்.
இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ‘மனித உரிமைகள்’ மாத இதழின் துணையாசிரியர் எம்.ஷேக் செர்ஷா, செய்தி சேகரிப்பு, அதில் தனக்கேற்பட்ட அனுபவங்கள், செய்தியாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், முஸ்லிம் சமூகம் குறித்த இன்றைய ஊடகங்களின் பார்வை, அழைப்புப் பணி உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி சிறப்புரையாற்றினார்.
தேனீர் இடைவேளைக்குப் பின், புகைப்படக் கலைஞர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், புகைப்படக் கலை குறித்தும், செய்திகளுக்காக புகைப்படங்களைப் பதிவு செய்கையில் தனக்கேற்பட்ட அனுபவங்கள் குறித்தும் உரையாற்றினார்.
பின்னர், இம்முகாமை நடத்திய இணையதளத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஏ.எம்.தவ்ஃபீக், மென்பொருள் மூலம் செய்திகளை வடிவமைத்தல், புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து வெளியிடுதல் உள்ளிட்டவற்றை, விரிதிரை துணையுடன் விளக்கிப் பேசியதோடு, செய்முறை விளக்கப் பயிற்சியுமளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து இஸ்லாம் கூறும் வழிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் மதுரையைச் சேர்ந்த மவ்லவீ ஆஷிக் ஃபிர்தவ்ஸீ உரையாற்றினார்.
நிகழ்வுகளை செய்திகளாக்குதல், செய்திகளைத் தரம் பிரித்து எழுதுதல், விரிவான செய்திகளை அவற்றின் சுவை குன்றாது சுருக்கமாக வடிவமைத்தல், புகைப்படக் கலை, முகாமை நடத்திய உள்ளூர் இணையதளம் தொடர்பான தகவல்கள் என பல்வேறு அம்சங்கள் இம்முகாமில் பரிமாறப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், கஃப்பாரா துஆ - பிரார்த்தனையுடன் முகாம் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. பின்னர், நிகழ்விடத்திலேயே லுஹர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |