வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்குள், ஹஜ் பெருநாளுக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவியை ஏழைகளுக்கு வினியோகம் செய்திடுவதென சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட துவக்கம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 06ஆம் தேதி இரவு 19.45 மணிக்கு, மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
செயற்குழு உறுப்பினர் சோனா அபூபக்கர் ஸித்தீக் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வரவேற்புரையாற்றினார்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் மகத்தான ஒத்துழைப்புகள் காரணமாக மன்றச் செயல்பாடுகள் எவ்வித தொய்வுமின்றி சிறப்புற செய்யப்பட்டு வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன், அண்மையில் துவக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’ குறித்தும் அவர் சில தகவல்களைக் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைத்த - மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் உரையாற்றினார். ரமழானை முன்னிட்டு சுமார் 2 மாத கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூட்டப்பட்டுள்ளமையால், மன்ற அங்கத்தினருடனான தகவல் பரிமாற்றத்தில் தொய்வின்றி இயங்குவதற்கு, இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகக் கூறிய அவர், கூட்டத்தில் தாம் பங்கேற்பது குறித்து முறையான தகவல்களை உடனுக்குடன் உறுப்பினர்கள் தந்துதவினால், இரவுணவு ஏற்பாடுகள் உள்ளிட்ட கூட்ட ஏற்பாடுகளைக் குறைவின்றி செய்திட அது வழிவகுக்கும் என்றும் கூறினார்.
மன்றத்தின் பெரும்பாலான செயல்திட்டங்கள் - மன்ற உறுப்பினர்களின் சந்தா தொகையையே சார்ந்திருப்பதால், உறுப்பினர்கள் தம் காலாண்டு சந்தா தொகைகளை உரிய நேரத்தில் செலுத்தி ஒத்துழைத்திடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்வறிக்கை மற்றும் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து, மன்றத்தின் துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை விளக்கிப் பேசினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையையும், ஜகாத் நிதி சேகரிப்பு குறித்த கணக்கு விபரங்களையும் மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்ததோடு, உறுப்பினர் சந்தா தொகைகளை உடனுக்குடன் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
கடந்த ரமழான் மாதத்தில், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் முன் முயற்சியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட - நகர பள்ளிகளின் இமாம்-பிலால்களுக்கான பெருநாள் ஊக்கத்தொகை வினியோகத் திட்டம் குறித்து தக்வா அமைப்பின் சார்பில், அதன் செயலர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை, உறுப்பினர் காதிர் ஸாஹிப் அஸ்ஹர் கூட்டத்தில் வாசித்தார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த சுல்தான் அப்துல் காதிர், குறுக்கத் தெருவைச் சேர்ந்த சாமு ஷிஹாபுத்தீன் ஆகிய இருவர் புதிதாகக் கலந்துகொண்டனர். புதிய உறுப்பினர்களான அவ்விருவரும் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து, நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் விவரித்தார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்வாக பரிசீலனைக்காக அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்டம் ‘ஷிஃபா’ துவங்கப்பட்டுவிட்டதால், மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான உதவிகள் அனைத்தும் 01.09.2013 முதல் ‘ஷிஃபா’ மூலமே வினியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
இக்ராஃவுக்கான சந்தா:
அடுத்து, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் பேசினார். மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோரிடமிருந்து இக்ராஃவுக்கான சந்தா தொகைகள் பெறப்பட்டுவிட்டதாகவும், சில உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஹஜ் பெருநாளுக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
ரமழானுக்கான - மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வினியோகித்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளுக்கான வினியோகம் விரைவில் செய்யப்படவுள்ளதாகவும் கூறிய அவர், நடப்பு திட்டத்தில் இடம்பெற வேண்டிய சமையல் பொருட்கள் குறித்து இறுதி முடிவு செய்ய, மன்றத்தின் துணைப் பொருளாளர் அபூ முஹம்மத் உதுமான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 30.09.2013 தேதி அதற்கான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஹஜ் பெருநாளுக்கான சமையல் பொருளுதவித் திட்ட செயல்பாடுகளின்போது, திட்ட ஒருங்கிணைப்பாளர் சிங்கப்பூரில் இருக்க மாட்டார் என்பதைக் கருத்திற்கொண்டு, இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, சோனா அபூபக்கர் ஸித்தீக் வசம் ஒப்படைக்கப்பட்டது. 10.10.2013 தேதிக்குள் இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் வினியோகத்து முடிக்க, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
பயன்படுத்திய நல்லாடை வினியோகம்:
மன்றத்தின் - பயன்படுத்தப்பட்ட நல்லாடை வினியோகத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்படும் பயன்படுத்திய நல்லாடைகள், 3ஆம் கட்டமாக வரும் 10.10.2013 தேதிக்குள் காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைத்திட தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான இடத்தில் மாற்றம் வேண்டுமென பெருவாரியான உறுப்பினர்கள் ஆவலுற்றதையடுத்து, நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் - இன்ஷாஅல்லாஹ் வரும் 22.09.2013 தேதியன்று, Aloha Chalet - Loyangஇல் மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஷிஃபா குறித்த தகவல்கள்:
உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்டமான ‘ஷிஃபா’ குறித்து, மன்றத்தின் துணைத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் நேரடியாகவும், கூட்டத்தின்போது சிங்கப்பூரிலில்லாத மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தொலைபேசி வாயிலாகவும் விளக்கிப் பேசினர்.
>> ‘ஷிஃபா’வைத் துவக்கி செயல்படுத்துவதற்கான முதல் கூட்டம்
>> ‘ஷிஃபா’வின் சட்ட விதிகள் (By Law)
>> ‘ஷிஃபா’வின் கீழ் செய்யப்படும் செயல்திட்டங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள்
குறித்த தகவல்கள் அவர்களால் கூட்டத்தில் பரிமாறப்பட்டது.
‘ஷிஃபா குறித்து செயற்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர்கள் தேவையான விளக்கங்களை அளித்தனர். மன்றச் செயலாளர் சிங்கப்பூர் வந்த பின், ‘ஷிஃபா’ செயல்திட்டம் குறித்து விளக்குவதற்கென்றே தனியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஹஜ் பயணம் செல்லும் மன்றத் தலைவருக்கு வாழ்த்து:
நடப்பாண்டில் தன் குடும்பத்தினருடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் அவர்களுக்காக - அவர்களது பயணம் சிறப்புறவும், அவர்களின் அனைத்து அமல்கள் மற்றும் வேண்டுதல்களும் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படவும் கூட்டத்தில் வாழ்த்திப் பிரார்த்திக்கப்பட்டது. மன்ற உறுப்பினர்கள் அனைவருக்காகவும், மன்றத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காகவும் துஆ செய்திட அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை ஒருங்கிணைக்க, உறுப்பினர் செய்யித் லெப்பை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு - துணைக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பின்னர் அனைவருக்கும் இடியாப்பம், கோழிக்கறி, ஜவ்வரிசி உள்ளிட்ட பதார்த்தங்களுடன் அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் குறித்து அதன் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 11:08 / 12.09.2013] |