காவல்துறையின் பலத்த பாதுகாப்பிற்கிடையே, விநாயகர் ஊர்வலம் காயல்பட்டினத்தை விட்டும் அமைதியாகக் கடந்து சென்றது. விபரம் வருமாறு:-
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஒரு நாளில் கொண்டாடப்பட்டு, வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அருகிலுள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு விநாயக சதுர்த்தி பண்டிகை இம்மாதம் 09ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினத்தையொட்டியுள்ள ஆறுமுகநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கடலில் கரைப்பதற்காக இன்று மாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
விநாயகர் ஊர்வலத்தில் ஆறுமுகனேரியைச் சேர்ந்த 48 விநாயகர் சிலைகளும், கயத்தாறு ஒன்றியத்தைச் சேர்ந்த ஐந்து விநாயகர் சிலைகளும், நாசரேத், நல்லான்விளை, இடையன்விளை குரும்பூர், நாலுமாவடி, மூலக்கரை, ராணிமகராஜபுரம், ஆத்தூர், மேல ஆத்தூர், தலைவன்வடலி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 81 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டன.
ஊர்வலம் செல்லும் வழியில் பேயன்விளை புதூர், அழகாபுரி, லட்சுமிபுரம், இரத்தினபுரி, காயல்பட்டினம் சிவன்கோவில் தெரு, விசாலட்சுமி கோவில் தெரு, மன்ன ராஜா கோவில் தெரு, பூந்தோட்டம் மற்றும் ஓடக்கரையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இணைந்து வீரபாண்டியன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் சென்று கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.
மாலை 05.40 மணியளவில், காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவை வந்தடைந்த ஊர்வலம், அங்கிருந்து விசாலாட்சியம்மன் கோயில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டது. மாலை 06.10 மணியளவில் ஊர்வலம் காயல்பட்டினம் எல்லையை முற்றிலுமாகக் கடந்து சென்றது.
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு, ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.துரை தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் ஞானசேகரன் (திருச்செந்தூர்), சி.பி.கந்தசாமி (மாவட்ட குற்றவியல் ஆவண காப்பகம்), பிரான்சிஸ் சேவியர் பெஸ்கி (தூத்துக்குடி நகரம்), ஆறுமுகனேரி ஆய்வாளர் டி.பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் காவல்துறையினரும், ஊர்க்காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக, இன்று காலை முதல் காயல்பட்டினம் காட்டு மகுதூம் பள்ளி வரை காவல்துறையினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னெச்சரிக்கைக்காக, கலவர தடுப்பு வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியனவும் நிறுத்தப்பட்டிருந்தன. ஊர்வல நேரத்தின்போது, காயல்பட்டினம் வழியான வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அடைக்கலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.
கள உதவி & படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்
கடந்தாண்டு (2012) நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |