காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி, பெரிய நெசவு தெரு, ஐ.ஒ.பி. வங்கி, எல்.கே. லெப்பை தம்பி சாலை - வழியில்
புதிய சாலை அமைக்க பிப்ரவரி 4, 2013 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் விளம்பரம் மூலம் கோரப்பட்டன.
சுமார் 28.50 லட்ச ரூபாய் மதிப்பிலான இப்பணிக்கு - ஒப்பந்தப்புள்ளிகள் ஏதும் பெறப்படாததால் - மீண்டும் இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி
மார்ச் 4 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது. மார்ச் 21, 2013 வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து, அதற்குரிய கூட்டம் -
ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெற இருந்ததால், மார்ச் மாதம் நகர்மன்றக்கூட்டம் நடைபெறவில்லை.
ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் ஆர்.நாகூர் மீராசா என்ற ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு
தொகைக்கு 0.0003% குறைவாக இப்பணியை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்ததால், அவருக்கு ஒப்பந்தம் வழங்க நகர்மன்றம் தீர்மானித்தது
(தீர்மானம் எண் 383).
25 லட்ச ரூபாய்க்கு மேலான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு மண்டல பொறியாளர் (REGIONAL ENGINEER) அனுமதி பெறப்படவேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படாத காரணத்தாலும், சாலை ஆழமாக தோண்டி பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பொது மக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாலும்,
நகர்மன்றத்தின் மே மாதக்கூட்டத்தில், முந்தைய தீர்மானம் (தீர்மானம் எண் 383) ரத்து செய்யப்பட்டு, புதிய
மதிப்பீடான 29.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோர முடிவுசெய்யப்பட்டது.
புதிய ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியன்று கோரப்பட்டதில், ஒப்பந்ததாரர் ஆர்.நாகூர் மீராசா - மதிப்பீட்டு தொகையைவிட 15.04% கூடுதலாகவும், மாடசாமி என்பவர் - மதிப்பீட்டு தொகையைவிட 20.89% கூடுதலாகவும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருந்தனர். மதிப்பீட்டு தொகையை விட மிக அதிகமாக ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டதற்கு காரணம் - நகராட்சி பொறியாளர்கள், மதிப்பீடு தொகையினை 2012-13 ஆம் ஆண்டு அட்டவணை அடிப்படையில் தயாரித்திருந்ததே என தெரிகிறது.
2013-14 ஆண்டிற்கான அட்டவணை அடிப்படையில், புதிதாக 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் தயார் செய்யப்பட்டு, அவ்விசயம் ஆகஸ்ட் 16 அன்று நடைபெறவிருந்த நகர்மன்ற கூட்டத்தில் கூட்டப்பொருள் 39 ஆக இடம்பெற்றிருந்தது.
ஆகஸ்ட் (2013) மாத சாதாரண கூட்டத்தில் இருந்து பெருவாரியான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காரணத்தால், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அக்கூட்டத்தின் முடிவில் புதிய மதிப்பீட்டு தொகைக்கு - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் முன் அனுமதி வழங்கினார்.
ஆகஸ்ட் 27 அன்று கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு சம்பந்தமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது - ஒரு வழிப்பாதை குறித்த மதிப்பீட்டு தொகையும் மேஜை பொருளாக பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து - நேற்று (செப்டம்பர் 12), ஒரு வழிப்பாதையில் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஈ - டெண்டர் மூலம் அழைப்பு விடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தப்புள்ளிகள் - அக்டோபர் 4, 2013 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்
|