தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தொடர்பாகவும், துறை வாரியாக எடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மாவட்டத்ததின் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் 13.09.2013 வெள்ளிக்கிழமையன்று (இன்று) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பொதுப்பணிகள் துறை (கட்டடங்கள்), பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு), நெடுஞ்சாலைத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், வளர்ச்சித் துறை, பஞ்சாயத்துக்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், தூத்துக்குடி மாநகராட்சி, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை. மீன்வளத் துறை, வருவாய்த் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், முதன்மைக் கல்வி அலுவலர் போன்ற பல்வேறு துறையினருக்கு பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார். குறிப்பாக,
>> நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், கால்வாய்கள் மராமத்து பணிகள் செய்து தூர்வாரப்பட வேண்டும்...
>> ஏரிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், தடைகள் போன்றவை அகற்றப்பட வேண்டும்...
>> வெள்ளபெருக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அத்தியாவசியமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்...
>> தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்ற திட்டம் தீட்டப்பட்டு பாதுகாப்பிடங்கள் மற்றும் எந்த வகையான போக்குவரத்துகள் மூலமாக எந்த வழியாக வெளியேற்றுவது என்பது குறித்து திட்டம் வகுக்கப்பட வேண்டும்...
>> சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்பட வேண்டும்...
>> நெடுஞ்சாலைத்துறை மூலம் புல்டோசர், ஜேசிபி மற்றம் மரம் வெட்டி அகற்றும் கருவிகள் போன்ற கனரக இயந்திரங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட வேண்டும்...
என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் 01.10.2013 முதல் அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை,, மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, உதவி ஆட்சியர் (பயிற்சி) சமீரன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உட்பட - மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். |