தமிழ்நாடு ஹஜ் குழுமத்தின் சார்பில், இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜியருக்கு மாவட்ட வாரியாக தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட ஹஜ் பயணியருக்காக, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் இத்தடுப்பூசி முகாம் இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
அன்று காலை 09.30 மணியளவில் துவங்கிய முகாமை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஹஜ் குழும உதவி அலுவலர் ஹிதாயத் முஹ்யித்தீன், அதன் தன்னார்வலர் நெய்னா முஹம்மத் ஆகியோர் - பெயர் பதிவு, ஏற்பாடு மற்றும் வழிகாட்டுப் பணிகளைச் செய்தனர்.
சுகாதாரத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் உமா தலைமையில், டாக்டர் ராணி டப்ஸ், டாக்டர் அகல்யா, வட்டார சுகதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர்களான ஜெய்சங்கர், ஆனந்தராஜ், லின்ஸி தங்கராணி ஆகியோர் இம்முகாமில் ஹஜ் பயணியருக்கு மருத்துவ ஆலோசனை, தடுப்பூசி, போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஆகியவற்றை வழங்கினர்.
கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் அதன் மேலாளர் அப்துல் லத்தீஃப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் அதன் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், அரபி ஷாஹுல் ஹமீத், எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம், ஜரூக், தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், அதன் நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்தனர்.
தமிழ்நாடு ஹஜ் குழு மற்றும் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பாக இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த ஆண் - பெண் ஹாஜிகள் 93 பேருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில், பெரும்பாலானோர் கலந்துகொண்டு, தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொண்டனர்.
இம்முகாமைப் பயன்படுத்தத் தவறிய ஹஜ் பயணியர், ஹஜ் பயணத்திற்காக அவர்கள் புறப்படுகையில், சென்னையிலேயே எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் உமா தெரிவித்துள்ளார்.
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
தூத்துக்குடி மாவட்ட ஹஜ் பயணியருக்காக கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |