காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாத சாதாரண கூட்டம் செப்டம்பர் 27 அன்று நடைபெற்றது. 103 பொருட்கள் அடங்கிய அஜெண்டாவில் 11 பொருட்கள் மட்டுமே அன்றைய தினம் விவாதிக்கப்பட்டது. நேரமின்மை காரணமாக - எஞ்சிய பொருட்கள், திங்களன்று (இன்று; செப்டம்பர் 30) விவாதிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.
செப்டம்பர் 27 அன்று விவாதிக்கப்பட்ட சில விஷயங்களில் - பொருள் எண் 4 (ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நீட்டிப்பு) குறித்த நகர்மன்றத் தலைவரின் குறிப்பும் ஒன்றாகும். அன்று பேசிய உறுப்பினர்கள் - ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் தான், நகர்மன்றத் தலைவர், தனது குறிப்பில் குறிப்பிட்டிருந்த இரு ஒப்பந்தப்பணியாளர்கள் குறித்து புகார்கள் வந்ததாகவும், அது அவ்வாறு இருக்க - அந்த இரு ஒப்பந்தப்பணியாளர்கள் குறித்து, ஜூன் மாதத்திலேயே, தலைவர் தனது குறிப்பை எழுதி, அவ்வூழியர்கள் மீதான தன் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளார் என்றும் கூறினர்.
உறுப்பினர்களுக்கு ஜூன் மாதத்தில் வழங்கப்பட்ட கூட்டப்பொருளில், பொருள் எண் 4 க்கு, நகர்மன்றத் தலைவி எந்தக்குறிப்பும் எழுதவில்லை என காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆகஸ்ட் மாதக்கூட்டத்திற்கு விநியோகிக்கப்பட்ட அஜெண்டாவில், ஒத்திவைக்கப்பட்ட ஜூன் மாதக்கூட்டப் பொருள் எண் 4 க்கிற்கு, இடைப்பட்ட காலத்தில் தணிக்கை அதிகாரிகளின் ஆய்வு நடைபெற்ற பின்னணியில், தலைவரால் - குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது.
இன்று மீண்டும் கூடிய கூட்டத்தில், 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், நகர்மன்றத் தலைவர் தனது குறிப்பினை எழுதுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறினார். ஆனால், சட்டவிதிகள்படி, ஒத்திவைக்கப்பட்ட கூட்டப்பொருள், எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே புதிதாக கூட்டப்படும் கூட்டத்திலும் இருக்க வேண்டும் என்றும், அதில், புதிதாக நகர்மன்றத் தலைவரின் குறிப்பு இணைக்கப்படக்கூடாது என்றும் கூறினார். உறுப்பினரின் இந்த கருத்தை ஆணையரும் ஆமோதித்தார். உறுப்பினர் - தனது விளக்கத்தின்போது, எந்த சட்டவிதிப்படி புதிதாக குறிப்பு இணைக்கப்படக்கூடாது என விளக்கவில்லை.
சட்டம் அவ்வாறு கூறுகிறதா?
கூட்டப்பொருட்கள் குறித்து தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 இன் பிரிவு 25 மற்றும் இணைப்பு (Schedule) III, விதி 2(3) ஆகியவை விளக்கங்கள் வழங்குகிறது. அது தவிர - நகராட்சிகள் கையேடின் (MUNICIPAL MANUAL) Volume 1, Part 1, Chapter 1, Para 2 மற்றும் Volume 1, Part 2, Chapter 3, Article 42 ஆகியவை கூட்டப்பொருட்கள் குறித்து விளக்கங்கள் வழங்குகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள், நகர்மன்றத் தலைவர் - தனது குறிப்பினை ஒத்திவைக்கப்பட்ட பொருட்களில் புதிதாக இணைக்க எவ்வித தடையும் விதிக்கவில்லை. அது தவிர, சட்டவிதிகள், ஒத்திவைக்கப்பட்ட பொருட்களுக்கும், நடப்பு பொருட்களுக்கும் எவ்வித வித்தியாசமும் குறிப்பிடவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ள பொருளோ, புதிய பொருளோ - அவைகள் அனைத்தும் - நடப்பு கூட்டத்தில், மன்றத்தின் பரிசீலனைக்கான பொருட்கள் என்றே பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நகர்மன்றத் தலைவரோ, ஆணையரோ, இணைப்பு (Schedule) III, விதி 2(3) ப்படி, அம்மாதத்தில் விவாதிக்கப்படவுள்ள ஒவ்வொரு கூட்டப்பொருளுக்கும், தங்கள் குறிப்பினை இணைக்கலாம் என்றே சட்ட விதிகள் கூறுகின்றன. |