‘கலப்படக்’ களறி(?!)யுடன் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், சிங்கை ALOHA CHANGI SEA FRONT CHALET A பூங்காவில், இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 14.30 மணிக்குத் துவங்கி, இரவு 21.15 மணி வரை நடைபெற்றது.
புறப்பாடு:
மதியம் 15.00 மணியளவில், மன்ற உறுப்பினர்கள் Beach Road நிறுத்தத்திலிருந்தும், 15.30 மணியளவில் Bedok North Avenue 4 நிறுத்தத்திலிருந்தும் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 16.00 மணிக்கு அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர்.
அஸ்ர் தொழுகை:
மாலை 16.35 மணிக்கு, சிங்கை அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ அஸ்ர் தொழுகையை வழிநடத்த, உறுப்பினர்களனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.
தேனீர் & சிற்றுண்டி:
மாலை 16.45 மணிக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி அனைவருக்கும் பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனையில் உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்க, மறுபுறம் கடலோரத்தில் அமர்ந்தவர்களாக - மகளிர் தமக்கேயுரிய ‘பாரம்பரிய’ அரட்டையில் ஈடுபட்டனர்.
மாலை 18.15 மணிக்கு, மகளிருக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் விடையளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இரவு 19.10 மணிக்கு மஃரிப் தொழுகையை, சிங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்காஸிம் வழிநடத்த, உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்துடன் நிறைவேற்றினர்.
பொதுக்குழுக் கூட்டம்:
இரவு 19.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நிகழ்வுகள்வருமாறு:-
ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களை மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மன்றச் செயல்பாடுகள் குறித்த - மன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் கேட்டறிந்த அவர், அவற்றுக்கான விளக்கங்களையளித்ததோடு, மன்றத்தின் நகர்நலப் பணிகளை மெருகூட்டுவதற்கு இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் எப்போதும் அவசியம் என்று கூறினார்.
நடப்பு கூட்டத்தைத் தொடர்ந்து மகளிருக்காக நடைபெறவிருக்கும் வினாடி-வினா போட்டி குறித்து பேசிய அவர், மன்ற நடவடிக்கைகளில் மகளிரின் பங்கேற்பு மிகவும் அவசியம் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளின் மூலம் அவர்களும் மன்றத்தின் செயல்பாடுகளை விபரமாக அறிந்துகொள்ளவியலும் என்றும் கூறினார்.
அண்மைக் காலங்களில் மன்றத்தின் இளம் உறுப்பினர்களின் பங்களிப்பு உற்சாகமூட்டும் வகையில் உள்ளதாக அவர் பாராட்டினார்.
வழமைக்கு மாற்றமாக, நடப்பு குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு சமையல் ஏற்பாடுகள் எதுவும் தனியாக செய்யப்படாமல், அவரவர் இல்லங்களிலிருந்து ஆயத்தம் செய்து கொண்டு வர சொல்லப்பட்டுள்ளது என்றும், அவையனைத்தையும் கலந்து, ‘கலப்படக் களறி’ உணவு அனைவருக்கும் பரிமாறப்படவுள்ளது என்றும் கூறினார்.
தலைமையுரை:
அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத்தின் துணைத்தலைவர் டாக்டர் எம்.என்.முஹம்மத் லெப்பை உரையாற்றினார். பின்வருமாறு மூன்று அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது:-
(1) ஒற்றுமை:
மன்ற அங்கத்தினருக்கிடையிலான ஒற்றுமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தின் அனைத்துப் பணிகளிலும் – பொறுப்பாளர்கள் செய்வார்கள் என்று இருந்து விடாமல், அனைத்துறுப்பினர்களும் சம அளவில் பங்கெடுக்க முன்வந்தால், இன்னும் அதிகளவில் மன்றப் பணிகள் மெருகேறும் என்று கூறினார்.
(2) வெற்றி தரும் திட்டமிடல்:
சிங்கை காயல் நல மன்றம் (KWAS) துவங்கப்பட்டது முதல், முறையான திட்டமிடல் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், அதன் அனைத்து செயல்திட்டங்களும் இறையருளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் மன்றம் - தேவையுடைய மக்களுக்கு இயன்றதைச் செய்வதில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்றும் கூறினார்.
(3) மகளிர் பங்களிப்பு:
மன்றத்தின் செயல்பாடுகளில் கூடுதல் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டு, மகளிரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, அவர்களின் நல்ல பல ஆலோசனைகள் மன்றத்திற்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகளை மன்ற நிர்வாகம் தொடர்ச்சியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், அதன் ஒரு பகுதியாகவே - மகளிருக்கான மாதாந்திர நிகழ்ச்சிகள் மன்றத்தால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
புதுவரவறிமுகம்:
வேலைவாய்ப்பு தேடி சிங்கப்பூரில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள
(1) சுல்தான் அப்துல் காதிர் (சதுக்கைத் தெரு)
(2) ஸாமு ஷிஹாபுத்தீன் (குறுக்கத் தெரு)
(3) ஹாஃபிழ் அபுல் காஸிம் (ஆஸாத் தெரு)
ஆகிய காயலர்கள் இக்கூட்டத்தில் தம்மைத்தாமே அறிமுகம் செய்து பேசினர்.
தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்காக மன்ற உறுப்பினர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றியும் கூறினர். இக்காயலர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்திட உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வழிகளில் முனைப்புடன் முயற்சி மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மன்ற நிகழ்ச்சிகள் குறித்த தகவலறிக்கை:
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மன்றத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை, கணினி உதவியுடன் பவர்பாய்ண்ட் முறையில் மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அனைவருக்கும் விளக்கினார்.
தான் தாயகம் சென்றிருந்தபோது, மன்றத்தால் உதவிகள் பெற்ற பயனாளிகளைச் சந்திக்க வாய்ப்பேற்படுத்திக் கொண்டதாகவும், மன்றத்தின் சார்பில் அளிக்கப்படும் நிதியுதவிகள் தகுதியானவர்களுக்கே சேர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் கண்டறிய முடிந்ததாகவும் கூறிய அவர், உறுப்பினர்கள் தம் விடுமுறையில் தாயகம் செல்கையில், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுடன் அவ்வப்போது இணைந்து - பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கல் உள்ளிட்ட மன்ற நடவடிக்கைகளில் தம்மை தன்னார்வத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் பவர் பாய்ண்ட் ஸ்லைட் முறையில் அனைவருக்கும் விளங்கும் வகையில் விவரித்தார்.
துணைக்குழு உறுப்பினர்கள் கருத்துரை:
இதுநாள் வரை மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிய
எம்.எஸ்.செய்யித் லெப்பை
ஜெ.அபுல் காஸிம்
எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர்
எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
ஜெ.எஸ்.தவ்ஹீத்
ஆகியோர், தம் பொறுப்புக் காலத்தில் நடைபெற்ற மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மூலம் தாம் பெற்ற அனுபவங்களை தமது கருத்துரைகள் மூலம் பகிர்ந்துகொண்டனர்.
>> தெளிவான மற்றும் துள்ளியமான தகவல் தொடர்பு
>> உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அவர்களால் வழங்கப்படும் கூடுதல் அக்கறை
>> செயற்குழு உறுப்பினர்களுக்குள் பணிகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் மன்ற நடவடிக்கைகளில் நேர்த்தி
>> காயலர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வளர்ப்புக் கருத்தரங்கத்தை அடிக்கடி நடத்தல்
உள்ளிட்ட - துணைக்குழு உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைகள் மன்ற நிர்வாகத்திற்கு உரமூட்டுவதாய் அமைந்திருந்தன.
புதிய துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு:
அக்டோபர் 2013 முதல் ஏப்ரல் 2014 வரையுள்ள பருவத்திற்கு புதிதாகத் துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு குறித்து கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
(1) கே.எஸ்.நூருல் அமீன்
(2) எம்.எம்.அப்துல் காதிர்
(3) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
(4) ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
(5) எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
ஆகியோர், தன்னார்வத்துடன் தாமாகவே முன்வந்து, புதிய பருவத்திற்கான துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிட இசைவு தெரிவித்ததன் அடிப்படையில், அவர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.
ஷிஃபா குறித்து அறிமுகம்:
புதிதாகத் துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும் “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” குறித்து, மன்ற உறுப்பினர்களை நன்கறியச் செய்திடும் பொருட்டு, அதன் குறிக்கோள்கள், உதவி கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறைமை, வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசிய மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், ஷிஃபா தொடர்பான உறுப்பினர்களின் நடப்பு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
திருமண அழைப்பு:
சிங்கை காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மகன் பாளையம் எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர், எஸ்.ஏ.முஹம்மத் ஜவாஹிர் மகன் எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர், வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, தங்களுக்கு நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
வெற்றி மங்கையர்:
கூட்டம் துவங்குமுன், மாலையில் மகளிருக்கான வினாடி-வினா போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மங்கையர் விபரம்:-
(1) கதீஜா பீவி (கணவர் பெயர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்)
(2) மஃஸூமா (கணவர் பெயர்: எம்.எஸ்.செய்யித் லெப்பை)
(3) எம்.ஏ.ஃபாத்திமா ஸபீனா (கணவர் பெயர்: ஏ.எம்.முஹம்மத் உதுமான்)
(4) ஸஃபீனா (கணவர் பெயர்: சோனா அபூபக்கர் ஸித்தீக்)
ஹஜ் புனிதப் பயணம்:
சிங்கை - மஸ்ஜித் அப்துல் கஃபூர் (டன்லப்) பள்ளியின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ், நடப்பாண்டு தான் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதாகவும், தனக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். அனைவரும் அவருக்காகப் பிரார்த்தித்ததுடன், ஹஜ்ஜின்போது தமக்காகப் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
கருணையுள்ள அல்லாஹ் அவனது அளவற்ற அருளால் - அவரது ஹஜ் மற்றும் அது சார்ந்த அனைத்து நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக, ஆமீன்.
நிறைவுரை மற்றும் இறைவேண்டல்:
சிங்கை - மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, கூட்டத்தில் நிறைவுறையாற்றினார். அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்த அவர், இறைவேண்டல் - துஆ பிரார்த்தனையுடன் இரவு 21.15 மணியளவில் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.
அஜ்மீர் முறையில் கலப்படக் களறி:
பின்னர், ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட படி, நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரும் தத்தம் இல்லங்களிலிருந்து கொண்டு வந்திருந்த பல்சுவை உணவுகளை ஒரே பாத்திரத்தில் கொட்டி, அஜ்மீர் பாணியில் அதை நன்றாகக் கிளறிய பின், ஸஹன் முறையில் கலப்படக் களறியுணவை தாளங்களில் வைத்து, அனைவருக்கும் பரிமாறினர்.
பலர் வீட்டு உணவுகள் ஒரே பாத்திரத்தில் இணைந்தமையால், சுவையும் – மணமும் தூக்கலாக இருந்ததாகவும், இனி வருங்காலங்களிலும் இந்த அஜ்மீர் முறையை அடிக்கடி அமுல் படுத்தலாம் என்றும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கூறினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |