துபை காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் செயலாளர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டுள்ளார். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செப்டம்பர் மாத செயற்குழுக் கூட்டம், இறையருளால் இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையில், அவரது வில்லாவில் நடைபெற்றது.
எம்.இசட்.முத்து அஹ்மத் இறைமறை வசனங்களையோதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார். இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் மன்றத்தின் சார்பில் அவர் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், நகர்நலன் குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சென்ற கூட்டத்தின் நிலுவைப் பொருட்கள் மீது நடவடிக்கை:
மன்றத்தின் சென்ற மாத செயற்குழுக் கூட்டத்தின் நிகழ்வறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டு, அதன் தீர்மானங்களின் படி, இதுவரை நிலுவையிலுள்ள தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - ஜகாத் நிதியைப் பகிர்ந்தளித்தல்:
இவ்வாண்டு ஜகாத் நிதியாக மன்றத்தின் சார்பில் வசூலிக்கப்பட்ட நிதித் தொகையை, வழமை போல, உதவி வருபவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - இக்ராஃ போல் ஷிஃபா:
உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்ட அமைப்பான ஷிஃபா குறித்து விபரங்கள் கேட்டறியப்பட்டது. கல்விப் பணிக்காக இக்ராஃ கல்விச் சங்கம் இயங்கி வருவது போன்ற கட்டமைப்பில், மருத்துவ உதவிப் பணிகளுக்காக ஷிஃபா தொய்வின்றித் தொடர மன்றம் முழு நம்பிக்கை வைத்து, ஆதரவளிக்கிறது.
தீர்மானம் 4 - துளிர், திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகிலுள்ள பள்ளிக்கு உதவி:
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் வரவு - செலவு கணக்கின் விபரங்களைப் பெற்று, மன்றத்தால் இயன்றளவுக்கு நிதியளித்தல், திருநெல்வேலி மத்திய பேருந்து நிலையமருகில் கட்டப்பட்டு வரும் இறையில்லம் - பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இயன்றளவு நிதியுதவியளித்தல் உட்பட பல்வேறு நகர்நலத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய விவாதித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், சிறப்பு விருந்தினர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உரையாற்றினார். துபை காயல் நல மன்றத்தின் செயல்பாடுகள் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும், மற்ற காயல் நல மன்றங்களுக்கு இம்மன்றம் ஒரு வழிகாட்டியாகவே இருந்து வருவதாகவும் புகழ்ந்து பேசிய அவர், தான் சார்ந்த காவாலங்கா அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
மேலும், காயலர்களின் நிர்வாகத்தின் கீழ் சிறப்புற இயங்கி வரும் இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள அல்ஜாமிஉல் அள்ஃபர் - சம்மாங்கோட் பள்ளியின் விரிவாக்கத்திற்கு, துபையிலுள்ளோரும் தாராளமாய் உதவும்படி கேட்டுக்கொண்டார்.
நேரமின்மை காரணமாக, இவ்வாண்டின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்ட தேதி கூட்டத்தின்போது முடிவு செய்யப்படவில்லை. மேற்படி தேதியை மன்றத்தின் நிர்வாக மற்றும் ஆலோசனைக் குழு தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டது.
தேனீர் - சிற்றுண்டி உபசரிப்புடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றத்தின் சார்பாக,
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
(துணைத்தலைவர்)
படங்கள்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர்) |