103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியிருந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், காரசார விவாதங்களுக்கிடையே 11 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானமியற்றுவதற்காக இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர்மன்றத்தன் மாதாந்திர சாதாரண கூட்டம், இம்மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கடைசியாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் - மே மாதம் 31ஆம் தேதியன்று நடைபெற்றது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத சாதாரண கூட்டங்களை பெருவாரியான உறுப்பினர்கள் புறக்கணித்தனர். ஆகஸ்ட் 27 அன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது.
பங்கேற்ற உறுப்பினர்கள்:
இக்கூட்டத்தில், ஏற்கனவே தனது பொறுப்பை விட்டும் விலகுவதாகக் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தவிர அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருட்கள்:
பெருவாரி உறுப்பினர்களின் புறக்கணிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டங்களின் கூட்டப் பொருட்கள் உட்பட - இக்கூட்டத்தில் பின்வருமாறு 103 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவிருந்தது:-
கூட்டப் பொருட்களை, நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் வாசிக்கத் துவங்கினார்.
பொருள் எண் 001:
ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தும், நகராட்சியின் முன்னனுமதி பெறாமல் பழைய வாசகசாலை கட்டிடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருள் எண் 002:
பிறப்பு - இறப்பு பதிவுகளை அங்கீகரித்து தீர்மானமியற்றப்பட்டது.
பொருள் எண் 003:
இப்பொருளுக்கான செலவினங்களுக்கு முறையான பில்களை சமர்ப்பிக்கும் வரை இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.
பொருள் எண் 004:
இப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சிக்கு வருகை தந்த தணிக்கைத் துறை அதிகாரிகள், ரூபாய் 2.5 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதென தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரணை செய்யும் வரை எம்.எஸ்.நசீர் கான், முஹம்மது அலி ஆகியோரைத் தவிர மற்ற பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்று குறிப்பெழுதியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
இது தொடர்பாக நகராட்சி அலுவலர் முருகேசன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மீண்டும் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், நகராட்சியின் நிரந்தர அலுவலர்களை, அவர்களது மேலதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மட்டுமே வைக்க இயலும் என்றும், அந்த அடிப்படையில் - இந்த முறைகேட்டில் தொடர்புடைய அலுவலர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தான் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதார ஆவணங்களைக் காண்பித்தார்.
நகராட்சியின் தற்காலிகப் பணியாளர்களைப் பொருத்த வரை, நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அடிப்படையிலேயே அவர்கள் பணியமர்த்தப்படுவதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் நகர்மன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பணி செய்த இருவருக்கு அவர்களின் இரண்டு மாத சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தபோது, மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதைக் கருத்திற்கொண்டு அது தொடர்பானவர்களை விசாரிப்பது அதை விட முக்கியமானது என்றும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற விபரத்தை ஆணையரிடம் கேட்குமாறும், இது தொடர்பான அவ்விரு தற்காலிகப் பணியாளர்களையும் நேரடியாக அழைத்துக் கேட்க வேண்டுமெனவும் தலைவர் கூறினார்.
பின்னர், அவ்விரு ஊழியர்களும் கூட்டரங்கிற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, ஜூலை மாத (ஒரு மாத) ஊதியத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஜூலை மாத சம்பளம், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் கூறியதால் வழங்கப்பட்டதாக ஆணையர் கூறினார்.
தான் ஆட்சேபித்து குறிப்பெழுதியுள்ள நிலையில் அவருக்கு ஊதியம் வழங்கியதற்கான காரணம் குறித்து தொலைபேசி மூலம் ஆணையரிடம் வினவியபோது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) சொன்னதால் ஊதியத்தை வழங்கியதாகக் கூற, உடனடியாக ஆர்.டி.எம்.ஏ.வுக்குத் தொடர்புகொண்டபோது, “இதுவா எனக்கு வேலை?” என்று கேட்டு, தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
தான் குறிப்பெழுதிய பிறகும் விசாரிக்கப்பட வேண்டிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய ஆணையர், தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் அடுத்த (ஆகஸ்ட்) மாதத்திற்கான ஊதியத்தை வழங்க கையொப்பம் கேட்டபோது, “முந்தைய மாதத்தில் எப்படி முடிவெடுத்தீர்களோ அப்படியே இதற்கும் செய்துகொள்ளலாமே...? எனது கையெழுத்து எதற்கு?” என்று கூறி தான் மறுத்துவிட்டதாகவும் நகர்மன்றத் தலைவர் மேலும் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி நீண்ட நேரம் விவாதத்தில் ஈடுபட்டனர்.
நிறைவில், இப்பொருள் மீதான நகர்மன்றத் தலைவரின் குறிப்பை நிராகரித்தும், பணி ஒப்பந்தக் காலம் நிறைவுற்ற அனைத்து தற்காலிக உறுப்பினர்களுக்கும் 89 நாட்களுக்கு பணிக் காலத்தை நீட்டித்து தீர்மானமியற்றப்பட்டது.
பொருள் எண் 005:
தற்காலிகப் பணியாளரான தொழில் நுட்ப உதவியாளர் கே.செந்தில் குமாருக்கு 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கி தீர்மானிக்கப்பட்டது.
பொருள் எண் 006:
செலவுச் சீட்டுகளுக்கான ரசீதுகள், ஆதார ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படாததால் இப்பொருளை ஒத்தி வைத்து தீர்மானமியற்றப்பட்டது.
இவ்வாறாக, 6 பொருட்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டு தீர்மானமியற்றப்பட்ட நிலையில், மாலை 06.00 மணியாகிவிட்டதால், பொருள் எண் 017, 088, 094, 102, 103 ஆகிய ஐந்து கூட்டப் பொருட்களை மட்டும் அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொருள் எண் 017:
பொருள் எண் 088:
பொருள் எண் 094:
பொருள் எண் 102, 103:
இந்த ஐந்து பொருட்களையும் அங்கீகரித்து கூட்டத்தில் தீர்மானமியற்றப்பட்டது. அத்துடன் கூட்டம் தற்காலிகமாக நிறைவுற்றது.
எஞ்சிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக, இம்மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 03.00 மணிக்கு மீண்டும் நகர்மன்றக் கூட்டம் தொடரும் என நகர்மன்றத் தலைவர் அறிவித்தார்.
கூட்டத் துளிகள்...
நகர்மன்றத் தலைவர் குறிப்பு தொடர்பாக...
பெரும்பான்மை உறுப்பினர்கள் இணைந்து தீர்மானமியற்றும் ஒரு பொருளில், நகர்மன்றத் தலைவர் அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில் குறிப்பெழுதி வைப்பதால், அத்தீர்மானம் குறித்து பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லாமல் போய் விடுவதாகவும், இதனால் பாதிக்கப்படுவது ஊர் மக்களே என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கூறினார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், உளத்தூய்மையுடன் மக்களுக்குப் பணியாற்றுவதற்காகவே அவர்கள் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட விஷயங்களில், பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானமியற்றினால் அது நிறைவேறும் என்று கூறும் சட்ட விதிகள், அத்தீர்மானங்கள் மீது நகர்மன்றத் தலைவரின் குறிப்பை எழுதவும் அதிகாரமளித்துள்ளது என்று கூறினார்.
குப்பை கொட்ட இடம்...
முந்தைய நகர்மன்றத் தலைவர் தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து குப்பை கொட்ட இடமளிக்க முன்வந்ததாகவும், அவர் தருவது பிடிக்காததாலும், ஐக்கியப் பேரவை இவ்விஷயத்தில் தலையிட்டதாலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வந்தபோது அந்த இடத்தை - சுற்றுச்சூழலைக் காரணங்காட்டி தலைவி வேண்டுமென்றே காண்பிக்காமல், ஓடக்கரையிலுள்ள மற்றோர் இடத்தைக் காண்பித்ததாகவும், இதை மாவட்ட ஆட்சியருடன் வந்த அலுவலர் கூறியதாகவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், அந்த இடம் CRZ எல்லைக்குள் வருவதாகவும், அப்படியோர் இடத்தை தானே நினைத்தாலும் ஒப்புதல் தர இயலாது என்று மாவட்ட ஆட்சியர் தன்னிடம் கூறியதாகவும், அதனடிப்படையிலேயே வேறிடங்களைக் காண்பித்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நகர்நலன் விஷயத்தில் தனக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், குப்பை கொட்டுவதற்கான இடம் தேடும் பணி கடந்த நகர்மன்ற பருவத்தின்போதே துவங்கியிருக்க, அப்போதே (CRZ சிக்கல் உள்ள) இந்நிலத்தை அளித்து பணியை முடித்திருப்பதை விட்டுவிட்டு, இப்போது இவ்வளவு காலம் தாமதித்து, சிரமப்பட வேண்டிய அவசியமில்லையே...? என்றும் கூறினார்.
கடற்கரை நுழைவாயில் அருகில் புதிய கட்டிடம்...
காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயில் அருகில் புதிதாகக் கட்டிடம் கட்டப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், CRZ எல்லைக்குள் வருவதாகக் காரணம் கூறியே கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு பணிகளை நிறுத்தியுள்ளதாகவும், அதை விட கடலுக்கு மிக அருகிலிருக்கும் இவ்விடத்தில் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது யார் என்றும் கேள்வியெழுப்பினார். அதை 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீனும் வலியுறுத்தினார். இக்கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நகராட்சி ஆணையர் கூறினார். இக்கருத்தை உறுப்பினர் அஜ்வாத் முன்வைத்தபோது, சில உறுப்பினர்கள் குறுக்கிட்டனர். எனினும், அவர் தன் கருத்தை முழுமையாகக் கூறி முடித்தார்.
தெரு விளக்கு பராமரிப்பு தனியார் மயப்படுத்தல்...
தெரு விளக்கு பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டுமென பதவியேற்ற துவகத்திலிருந்தே தான் கூறி வருவதாகவும், அப்போது ஏற்காத தலைவி, தற்போது தனியார் மயமாக்கலை ஆதரிப்பது குறித்தும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினத்திலுள்ள தெரு விளக்குகளின் எண்ணிக்கையை ஒத்த சில நகராட்சிகளில் மிகக் குறைந்த செலவு மதிப்பீட்டுத் தொகையே இவ்வகைக்காக காண்பிக்கப்பட்டிருக்க, காயல்பட்டினம் நகராட்சியில் அதை விட பல லட்சங்கள் கூடுதலாக (ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய்) மதிப்பீட்டுக் கணக்கு காட்டப்பட்டதாலேயே அப்போது தான் அதை எதிர்த்ததாகவும், பின்னர், அது தொடர்பான - இதர நகராட்சிகளின் ஆவணங்களைக் கருத்திற்கொண்டு மதிப்பீடு (ஆண்டுக்கு 16 லட்ச ரூபாய்) தயார்செய்யப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே தற்போது தான் அதை ஆதரிப்பதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், இதனால் நகர மக்களின் பணம் சுமார் 4 லட்சம் ரூபாய் (ஆண்டொன்றுக்கு) பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
குர்ஆன் மீது சத்தியம்...
ஒரு கட்டத்தில், அலுவலர் முருகேசனைக் காப்பாற்றுவதற்காக ஆர்.டி.எம்.ஏ.விடம் தலைவி பரிந்துரை செய்ததாக 12ஆவது வார்டு உறுப்பினர் சுகு கூறினார். அதை பல உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.
அக்குற்றச்சாட்டை நகர்மன்றத் தலைவர் உடனடியாக மறுத்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் அதைக் கூறவே, “குர்ஆனை முன்வைத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்க நான் தயார்! என் மீது குற்றச்சாட்டு வைக்கும் உறுப்பினர் சுகு பகவத் கீதையை வைத்து சத்தியம் செய்ய தயாரா?” என்று நகர்மன்றத் தலைவர் கேட்டார். அப்போது எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், இதற்கு சத்தியம் செய்ய முன்வந்ததைப் போல, “நான் எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக மாற்றி எழுதவில்லை என குர்ஆனை வைத்து சத்தியம் செய்வீர்களா?” என்று கேட்டார். எந்தத் தீர்மானத்தையும் தன்னிச்சையாக தான் எழுதவில்லை என்றும், அதற்கும் சத்தியம் செய்ய தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
சிறிது நேரத்தில், வெளியே சென்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், குர்ஆன் பிரதியை கூட்டரங்கிற்குள் கொண்டு வந்தார். அதைப் பார்த்த நகர்மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கூட்டரங்கை விட்டும் உடனடியாக வெளியேறினர். சத்தியம் எதுவும் செய்யப்படாத நிலையில், சத்திய சோதனை குறித்த பேச்சுக்கள் நிறைவுற்ற பின்னர், வெளியேறிய உறுப்பினர்கள் மீண்டும் உள்ளே வந்தனர்.
பார்வையாளர்கள்...
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
படங்கள் & களத்தொகுப்பில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |