54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் புது டில்லியில்செப்டம்பர் 27 அன்று துவங்கின. மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடைபெறுகிறது.
** 14 வயதுக்கு உட்பட்ட சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகள், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறும்.
** 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்கள் பிரிவு போட்டிகள், அக்டோபர் 5 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும்.
** 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகள், அக்டோபர் 4 முதல் அக்டோபர் 19 வரை நடைபெறும்.
தமிழகம் சார்பாக எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இப்போட்டிகளில் கலந்துக்கொள்ள இவ்வணி இன்று (செப்டம்பர் 29) காயல்பட்டினத்தில் இருந்து புறப்படுகிறது. புது டில்லியை அக்டோபர் 2 அன்று அடையும் இவ்வணி, தனது லீக் போட்டிகளை அக்டோபர் 4 (திரிபுரா), 5 (டில்லி) மற்றும் 6 (மேகாலயா) ஆகிய தினங்களில் விளையாடவுள்ளது.
நாடு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்ட 20,000 பள்ளிக்கூடங்களில் இருந்து - வெற்றிபெற்ற அணிகளே, புது டில்லியில் தற்போது நடக்கும் போட்டிகளில் கலந்துக்கொள்கின்றன.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இப்போட்டிகளை இவ்வாண்டு பெரிய அளவில் விளம்பரம் செய்யவுள்ளனர். TEN ACTION / TEN SPORTS தொலைக்காட்சிகளில் இப்போட்டிகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. 13 PVR சினிமா அரங்குகளிலும், 207 மெக்டோனல்ட்ஸ் / கோஸ்டா காபி உணவகங்கிலும், HIT 95 மற்றும் FM Rainbow வானொலி நிலையங்கள் மூலமும் இப்போட்டிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் மூன்று பிரிவுகளின் இறுதி போட்டிகளை தூர்தர்சன் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இப்போட்டிகளில் வெளிநாட்டு அணியினர் 5 உட்பட, மூன்று பிரிவுகளும் சேர்த்து, 81 அணிகள் கலந்துக்கொள்கின்றனர்.
முன்னதாக இப்போட்டிகள் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி - புது டில்லியில் செப்டம்பர் 23 அன்று நடைபெற்றது. அதில் இந்திய விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஹெச்.பி. ராஜாராம் AVSM, VSM கலந்துக்கொண்டார்.
|