மைக்ரோ காயல், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்திய - காயல் மருத்துவ அட்டை (KAYAL MEDICAL CARD - KMC) அறிமுக விழாவில் முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கு மருத்துவ அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது.
காயல் மருத்துவ அட்டை அறிமுக விழா 30.09.2013 திங்கட்கிழமை மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அலுவலக பொறுப்பாளர் கண்டி ஸிராஜ், மைக்ரோகாயல் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் எம்.எஸ்.எம்.மீராஸாஹிப், கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விழாவிற்குத் தலைமை தாங்கிய மைக்ரோகாயல் அறக்கட்டளை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், பைத்துல்மால் உதவித் திட்டங்கள் போல, இந்த மருத்துவ அட்டை திட்டமும் ஏழையெளிய மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டம் என்று அவர் கூறினார்.
மைக்ரோகாயல் அறங்காவலர் குழு உறுப்பினரும், ஷிஃபா துணைத்தலைவருமான ஜெ.செய்யித் ஹஸன் காயல் மருத்துவ அட்டை திட்ட அறிமுகவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
மைக்ரோகாயல் அமைப்பின் மூலம் கடந்த ஒன்றரையாண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களுக்கு உதவி வருகிறது.
இம்மக்களுக்கு நோய்கள் வரும்போது பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சையைப் பெறாமல், அந்நோய் தீவிரமடையக் காரணமாகி விடுகின்றனர். இதுபோன்ற குறைகளைக் களையும் நோக்குடனேயே - வருமுன் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்த மருத்துவ அட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
>> ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு பேருக்கு மட்டும் - ஓராண்டு கால அளவுக்கு, ரூபாய் பத்தாயிரம் வரையில், மருத்துவர் கட்டணம் (Consulting Fee), ஆய்வக பரிசோதனைக் கட்டணம் போன்ற மருத்துவ செலவினங்களுக்கு இந்த அட்டையைப் பயன்படுத்தலாம்.
>> காயல் மருத்துவ அட்டை திட்டத்தின் கீழ், 25 சதவிகித கட்டணத்தை பயனாளி பொறுப்பேற்க வேண்டும். எஞ்சிய 75 சதவிகிதத்தில், கே.எம்.டி. மருத்துவமனை 25 சதவிகிதமும், மீதமுள்ள 50 சதவிகிதத்தை மைக்ரோகாயல் - ஷிஃபா அமைப்புகளும் பொறுப்பேற்றுக்கொள்ளும்.
உதாரணமாக, காய்ச்சல் என்று வரும்போது, மருத்துவச் செலவு 200 ரூபாய் எனில், பயனாளி 50 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
>> காயல் மருத்துவ அட்டை முதற்கட்டமாக ஆறு மாத கால அளவைக் (Validity) கொண்டிருக்கும். ஆறு மாத நிறைவில், ஓராண்டு கால அளவுக்கு நீட்டிப்பு செய்யப்படும்.
>> இத்திட்டத்தின் கீழ், மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே மருந்துகளைப் பெற்றுக்கொள்ள இயலும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த மருத்துவ அட்டை முதற்கட்டமாக காயல்பட்டினம் நகரின் 50 ஏழை எளிய பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாகவும், 2014 ஏப்ரல் முதல் 2015 மார்ச் மாதம் வரை 100 முதல் 150 பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இது தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளையும், ஒத்துழைப்புகளையும் மைக்ரோகாயல் எப்போதும் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.
அடுத்து, முன்னிலை வகித்த ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அலுவலகப் பொறுப்பாளர் கண்டி ஸிராஜ் உரையாற்றினார்.
மைக்ரோகாயல் - ஷிஃபா இணைந்து நடத்துதம் முதல் நிகழ்ச்சி என்பது பெருமிதத்திற்குரியது என்றும், ஏழைகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் கூறிய அவர், இத்திட்டம் சிறப்புற தொடர அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் கூறினார்.
அடுத்து கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப் உரையாற்றினார்.
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மனித வாழ்வின் முக்கியத் தேவைகளுக்கு காயல்பட்டினம் நகர்நல அமைப்புகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு துடிப்புடன் உதவி செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது என்று பேசிய அவர், தனது ஊரில் இதுபோன்ற அமைப்புகள் இல்லாததைக் குறிப்பிட்டு, காயல்பட்டினம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறியதுடன், இத்திட்டம் சிறக்க வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தாளாளர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் காழி அலாவுத்தீன், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் டி.ஏ.எஸ்.மீராஸாஹிப், அதன் முன்னாள் துணைத்தலைவர் எம்.ஏ.மெஹர் அலீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், காயல் மருத்துவ அட்டை 50 பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது. மைக்ரோகாயல் அறக்கட்டளை தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மைக்ரோகாயல் அறக்கட்டளை அலுவலகப் பொறுப்பாளர் எம்.எஸ்.எம்.மீராஸாஹிப் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகரின் பொதுநல ஆர்வலர்கள், காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மைக்ரோகாயல் அறக்கட்டளை துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித், அதன் அலுவலகப் பொறுப்பாளர் எம்.எஸ்.எம்.மீராஸாஹிப், அபூபக்கர் ஸித்தீக், ஹாஃபிழ் என்.எஸ்.மொகுதூம் அலீ ஸாஹிப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
களத்தொகுப்பு:
ஹாஃபிழ் N.S.மொகுதூம் அலீ ஸாஹிப்
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |