உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டு, அவர்களுள் 52 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 62 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இக்ராஃ துணைச்செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், உறுப்பினர் எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆகியோர் விசாரணையை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணி முதல் மதியம் 02:00 மணி வரை காயல்பட்டினம் கீழ நெயினா தெருவில் - இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் முன்னாள் துணைத்தலைவர்களும், தற்போதைய செயற்குழு உறுப்பினர்களுமான ஹாஜி எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதர் (சின்ன லெப்பை), ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோரடங்கிய குழு, மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தது. இக்குழுவிற்கு உதவியாக இக்ராஃவின் துணைச் செயலர் என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் மற்றும் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 22 மாணவர்கள், 30 மாணவியர் - நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மாணவரும், மூன்று மாணவியரும் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளாத காரணத்தால் அந்த நான்கு விண்ணப்பங்ககளும், விண்ணப்பித்து கல்லூரிக்கு செல்லாத மூன்று மாணவியரின் விண்ணப்பங்களும், 60 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற நிலையில் வின்னப்பித்திருந்த மூன்று மாணவியரின் விண்ணப்பங்களும் என மொத்தம் பத்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியருள் பலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இம்மாணவ - மாணவியருக்குத் தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
''இந்நேர்காணலில் 52 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், நடப்பாண்டு (2013 -2014) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 10 அனுசரணைகள் (sponsors) மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதில் அனுசரணை வழங்காத காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் இந்த மாணவ - மாணவியரின் ஒளிமயமான வாழ்விற்கு உதவிடும் வகையில் தமது தாராள அனுசரணைகளை (sponsorship) வழங்கி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் கடந்தாண்டு (2012-2013 கல்வியாண்டில்) நடத்தப்பட்ட நேர்காணல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |