இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் குறைந்தது ஒரு முறை ஹஜ் பயணம் மேற்கொள்வதாகும். பல நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்படும் இப்பயணம் - சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆபத்து நிறைந்த பயணமாகவே கருதப்பட்டது. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் அரசர்கள் கூட இப்பயணத்தை மேற்கொள்ள தயங்கினர் என வரலாறு கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேர் மேற்கொண்ட இப்பயணம், தற்போது வளர்ந்து பல நாடுகளில் இருந்து, 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொள்ளும் பயணமாக மாறியுள்ளது.
குறுகிய இடத்தில் பல லட்சம் பேர் கூடும் ஒரு நிகழ்வாக ஹஜ் பயணம் இருப்பதால், அசம்பவங்கள் ஏதும் நிகழாமல் பயணம் நிறைவுற சவுதி அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
பயணியர் அவர்கள் நாட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளவேண்டிய தடுப்பூசிகள் குறித்த அறிவுரை, சவுதி மண்ணில் அரசியல் எதிர்ப்புகளை காண்பிக்க தடை, லட்சோப லட்ச மக்கள் தங்கும் கூடாரத்தில் தீக்கு இரையாகாத கூரைகள், நெருக்கடி இல்லாமல் சைத்தானை கல் எரியும் வசதி என பல வகையான முயற்சிகளை சவுதி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்திய அரசாங்கமும் மருத்துவ வசதி போன்றவற்றை - தனது பயணியருக்கு வழங்குகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும், ஹஜ் பயணத்தின் போது, பயணியர் சிலர் உயிர் இழக்க நேரிடுகிறது.
உயிர் இழப்பவர்களில் பெருவாரியானவர்கள் - இயற்கை காரணமாக வயதானவர்கள் என்றாலும், நெருக்கடியினாலும், விபத்தினாலும் சிலர் மரணித்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் ஹஜ் பயணத்தின் போது மரணித்தவர்களின் விபரத்தை இந்திய ஹஜ் குழு வழங்கியுள்ளது.
இக்காலகட்டத்தில் மிக குறைவாக இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆகும். இது 1995 ஆம் ஆண்டு நடந்தது. அவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை - 31,000.
இக்காலக்கட்டத்தில் மிக அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்ட ஆண்டு - 1997 ஆகும். அவ்வாண்டு 240 இந்திய பயணியர் உயிரிழந்தனர். அதில் 147 பேர், மினாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்கள் ஆவர். அவ்வாண்டு சுமார் 54,000 பேர் - இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
1997 க்கு பிறகு, 1998 இல் நெருக்கடியில் 22 இந்தியரும், 2001 இல் 2 இந்தியரும், 2003 இல் 3 இந்தியரும், 2004 இல் 9 இந்தியரும், 2006 இல் 46 இந்தியரும் உயிரிழந்தனர்.
இயற்கையான காரணங்கள், நெருக்கடி காரணங்கள் தவிர இதர விபத்துக்களினாலும் ஒரு சிலர், ஹஜ் பயணத்தின் போது உயிர் இழக்க நேரிடுகிறது.
நடப்பாண்டில் - இதுவரை பல்வேறு காரணங்களினால், 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 5:45 pm / 5.10.2013] |