காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகியன இம்மாதம் 10, 11 தேதிகளில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு விழா:
10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறும் - பள்ளியின் Annual Sports Meet 2013 - வருடாந்திர விளையாட்டு விழாவில், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.சேவியர் ஜோதி சற்குணம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரையைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. பின்னர், விளையாட்டுப் போட்டிகள் முறைப்படி துவக்கப்படுகிறது.
14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்கும் மிதிவண்டி மெதுவோட்டப் போட்டி (Slow Cycle Race), பார்வையாளர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் பங்கேற்கும் லக்கி கார்னர் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் முறைப்படி நடத்தப்பட்டு, நிறைவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விளையாட்டு விழா நிறைவுறும்.
ஆண்டு விழா:
இம்மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, எல்.கே.மேனிலைப்பள்ளியிலுள்ள ஹாஜி எஸ்.ஏ.மீராஸாஹிப் அரங்கத்தில் பள்ளியின் ஆண்டு விழா நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.முஹம்மத் ஸாதிக் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரையைத் தொடர்ந்து, பள்ளியின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விழா தலைவரின் தலைமையுரை, சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை ஆகியன இடம்பெறுகிறது.
பின்னர், கடந்த கல்வியாண்டில் சாதனைகள் பல புரிந்த பள்ளியின் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நன்றியுரையைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுறும்.
விளையாட்டு விழா, ஆண்டு விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத்தலைவர்களான ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி எஸ்.எம்.உஸைர், தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆட்சிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தகவல்:
ஆசிரியர் S.B.B.புகாரீ |