2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று - மத்திய அரசு, Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 என்ற
விதிமுறைகளை - அரசு கெசட்டில் வெளியிட்டது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குப்பைகள் கொட்டுவதற்கான பிரத்தியேக
இடங்கள் (Compost Yards) - டிசம்பர் 2003 க்கு முன்னர், அடையாளம் காணப்பட்டு, பயனுக்கு வரவேண்டும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழக அரசு - டிசம்பர் 21, 2001 அன்று அரசாணை (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறை: GO No.59) ஒன்று வெளியிட்டது. அதில் - அப்போது மாநிலத்தில் இருந்த அனைத்து நகராட்சிகளுக்கும், மத்திய அரசின் அறிவிப்புப்படி,
குப்பைகள் கொட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்ய வழிமுறைகள் வழங்கப்பட்டன. இதற்கான நிலங்கள் வாங்குவதற்கு - 2001-02, 2003-04
மற்றும் 2004-05 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையம், சில நகராட்சிகளுக்கு PART 2 திட்டத்தின் கீழ் மானியம் வழங்கியது.
இந்த மானியம் வழங்கப்படும்போது நகராட்சி அந்தஸ்து பெறாத சில பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சியென அந்தஸ்து உயர்வு 2004 ஆம்
ஆண்டு வாக்கில் பெற்றன. அவற்றில் பல நகராட்சிகள் போதிய நிலம் இல்லாமலும், நிலம் வாங்க நிதி இல்லாமலும் இருந்தன. இதனை
தொடர்ந்து, செப்டம்பர் 6, 2006 ஆம் ஆண்டு - அரசாணை (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை: GO No.86) ஒன்று
பிறப்பிக்கப்பட்டது. அதில் காயல்பட்டினம் உட்பட 12 நகராட்சிகளுக்கு குப்பைகளை கொட்ட நிலம் வாங்க மானியம் வழங்கி - அறிவிப்பு
வெளியிடப்பட்டது. இந்த அரசாணை மூலம் நிலம் வாங்கும் வகைக்காக, PART 2 திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய் அரசு மானியம் காயல்பட்டினம்
நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு பதவியேற்ற வஹீதா தலைமையிலான நகர்மன்றத்தின் இறுதி வாரங்களில் இந்த அரசு மானியம் வழங்கப்பட்டதால் - இந்த திட்டம்
குறித்து மேலும் எந்த பெரிய முடிவையும், அந்த நகர்மன்ற அங்கத்தினரால் எடுக்கமுடியவில்லை.
அக்டோபர் 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் தலைமையிலான
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையம் சார்பாக நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் திடமேலாண்மை குறித்த கையேடு
ஒன்று வெளியிடப்பட்டது. அந்த கையேட்டினை காண இங்கு அழுத்தவும்.
343 பக்கங்கள் கொண்ட அந்த கையேட்டில் குப்பைகள் கொட்ட இடம் தேர்வு செய்வது உட்பட பல தகவல்களும், வழிக்காட்டுதல்களும்
இடம்பெற்றிருந்தது. குறிப்பாக குப்பைகளைக்கொட்ட தேர்வு செய்யப்படும் இடம் - Coastal Regulation Zone (CRZ) பகுதியாக இருக்கக்கூடாது
என்பதாகும்.
அக்டோபர் 28, 2009 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் - திடக்கழிவு மேலாண்மை பணிக்காக உரக்கிடங்கு (COMPOST YARD) வாங்குவது குறித்து
தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மானின் மகளுக்கு சொந்தமான நிலத்தினை (காயல்பட்டினம்
தென் பாக கிராமம் சர்வே எண் 278) - சந்தை விலைக்கு குறைவாக நகராட்சிக்கு வாங்கிட முடிவுசெய்யப்பட்டது. அத்தீர்மானத்தில் ஏக்கர் ஒன்றின்
அப்போதைய சந்தை விலை 1.5 லட்ச ரூபாய் என்றும், அரசு வழிக்காட்டு விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 59,000 என்றும், அரசு வழிக்காட்டு
விலைக்கு கூடுதலாக, சந்தை விலைக்கு குறைவாக - ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வீதமாக - 5 ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கிரையத்தில்
நிலத்தினை வாங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றிட - இதன் விபரங்களை மாவட்ட ஆட்சியருக்கு
அனுப்பிடவும், அக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் அக்டோபர் 2009 இல் 5 ஏக்கர் நிலம் தருவதாக கூறி - தீர்மானங்கள் நிறைவேற்றியப்பின், தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை (TNPCB), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய அரசு துறைகளுக்கு காயல்பட்டினம் நகராட்சியினால்
விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது.
நகராட்சியின் விண்ணப்பத்திற்கு பதில் கூறிய நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் - இந்த சர்வே எண் CRZ பகுதிக்குள் வருகிறது என
20.10.2010 அன்று நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்.
நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் 20.10.2010 அன்று நகராட்சிக்கு அனுப்பிய கடிதம்
15.11.2010 அன்று நகராட்சி செயல் அலுவலர் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, ஒப்புதல் கோரி, DTCP அலுவலக அதிகாரியின்
கடித்தையும் இணைத்து அனுப்பினார்.
15.11.2010 அன்று நகராட்சி செயல் அலுவலர் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதிய
கடிதம்
அதனை தொடர்ந்து மீண்டும் 17.2.2011 அன்று நகராட்சி சார்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அக்கடிதத்தினை தொடர்ந்து - 18.4.2011 தேதியிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், CRZ பகுதியில் உள்ள நிலத்தின் அளவு
குறித்து நகராட்சியிடம் விபரம் கோரியது.
மீண்டும் 19.05.2011 அன்று தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் - விபரங்கள் கோரி, நகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது. நகராட்சியில் இருந்து
எந்த பதிலும் அனுப்பப்படவில்லை. கடைசி கடிதத்திற்கு 5 மாதங்கள் கழித்து - புதிய நகர்மன்றத்திற்கான தேர்தல் நடந்து, புதிய நகர்மன்ற
உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
கூடுதல் விபரங்கள் கேட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாக எவ்வித பதிலும் அனுப்பப்படாததால், ஆவணங்களை திருப்பி அனுப்பவதாக 4.7.2012 அன்று -
காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையருக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது.
முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்ட இடம் CRZ பகுதிக்குள் வருகிறது என்று முதன்முதலாக நகராட்சிக்கு 20.10.2010 அன்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்கள் கேட்டு இரு முறை (18.04.2011 / 19.05.2011) - மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்
எழுதியும் எவ்வித பதிலும் முந்தைய நகர்மன்றத்தால் அனுப்பப்படவில்லை.
தமிழக அரசு கடந்த ஆண்டு - பயோ காஸ் திட்டத்தினை காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கிய பின்னர், அத்திட்டத்திற்கான இடத்தேவை குறித்த
கோரிக்கையை வைத்து - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆகஸ்ட் 2012 இல் -
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை உட்பட நகரின் அனைத்து அமைப்புகளுக்கும், ஜமாஅத்துகளுக்கும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார்.
நிலம் தர எந்த அமைப்பும், தனி நபரும் முன் வராத காரணத்தால் - வருவாய் அதிகாரிகளின் உதவிக்கொண்டு சில நிலங்கள் அடையாளம்
காணப்பட்டு, நவம்பர் மாத நகர்மன்றக்கூட்டதில் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் பலர் - ஐக்கிய பேரவையிடம் நிலம் கோரலாம்
எனக்கூறி, அவ்வமைப்பிடம் கோரிக்கை கடிதமும் வழங்கினர்.
டிசம்பர் 19, 2012 அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடந்த ஐக்கியப்பேரவை கூட்டத்தில்,
முன்னாள் நகர்மன்றத் தலைவர் - ஐக்கிய பேரவை மூலம் 5 ஏக்கர் நிலம் தர சம்மதிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் -
எந்த சர்வே எண் நிலம் என்ற விபரம் கூறப்படவில்லை. மேலும் இம்முடிவு குறித்த விபரமும் நகர்மன்றத் தலைவருக்கு ஐக்கிய பேரவையால்
வழங்கப்படவில்லை.
பின்னரே - ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன்வந்த இடம், 2009 ஆம் ஆண்டே முன்னாள் தலைவர் தர முன்வந்த
சர்வே எண் 278 நிலம் தான் என தெரியவந்தது.
முன்னாள் நகர்மன்றத் தலைவரால் நகராட்சிக்கு வழங்கப்பட்ட சர்வே எண்ணில் (278) மூன்று பிரிவுகள் உள்ளன. சர்வே எண் 278/1 - சுமார் 24
ஏக்கர் 26 சென்ட் அளவிலானது. சர்வே எண் 278/2 - சுமார் 39 சென்ட் அளவிலானது. சர்வே எண் 278/3 - சுமார் 42 சென்ட் அளவிலானது.
சர்வே எண் 278 க்கான FMB (FIELD MEASUREMENT BOOK)
FMB வழங்கும் தகவல்படி - சர்வே எண் 278 ன் கிழமேல் அகலம் சுமார் 550 மீட்டர் அளவு உள்ளதாக தெரிகிறது. கடலில் இருந்து (HTL) 500
மீட்டர் CRZ பகுதி. CRZ பகுதிக்கு அப்பாற்பட்டு - தேவையான 5 ஏக்கர் நிலம் என்பது சுமார் 20,000 சதுர மீட்டராகும். சர்வே எண் 278 இல்
மேற்க்கோரமாக எஞ்சியுள்ள ஏக்கர் அளவு எவ்வளவு என்பது தெளிவில்லை.
மேலும் குப்பைக்கொட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கான நிலத்தின் எல்லைகளை முடிவு செய்த பின் - அந்த எல்லையை சுற்றிய 500 மீட்டர் பகுதி
- எந்த வளர்ச்சிப் பணிகளும் அனுமதிக்கப்படாத பகுதியாக (NO DEVELOPMENT ZONE) அறிவிக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.
இந்த விதிமுறைக்கு - சர்வே எண் 278 இன் நில உரிமையாளரோ, இவ்விதிமுறை கட்டுப்படுத்தக்கூடிய, இந்த சர்வே எண்ணுக்கு அடுத்துள்ள சர்வே
எண்களின் உரிமையாளர்களோ சம்மதம் தெரிவிப்பார்களா என்பது தெளிவில்லை.
இந்த சர்வே எண்ணை அடைய புதிய சாலை - கடலில் இருந்து 500 மீட்டருக்கு தள்ளி அமைக்கப்படவேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் சாலை -
பல சர்வே எண்களை தாண்டி அமைக்கப்படவேண்டும். அதற்கு அந்த நிலங்களின் உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்பதும் தெளிவில்லை.
புதிய சாலை தாண்ட வேண்டிய சர்வே எண்களை காண்பிக்கும் படம்
இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி - இந்த சர்வே எண் தேர்வு செய்யப்பட்டாலும், குப்பைகள் மட்டும் கொட்டவே இந்த இடம் பொருத்தமாக
இருக்கும்.
ஏனெனில் பயோகாஸ் பிளான்டினை இயக்க உயர் தர மின்சார இணைப்பும் அவசியம். காயல்பட்டினம் வடக்கு எல்லையில் அமைந்துள்ள சர்வே எண்
278 பகுதியில் மின் இணைப்புகள் இல்லை. அவ்வாறு மின்சார இணைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மற்றொரு சவாலும் உள்ளது.
பயோகாஸ் பிளான்ட் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் - தெரு விளக்குகளை இயக்க பயன்படுத்தபடவேண்டும். சுமார் 4 வார்டுகளில் உள்ள 200
தெருவிளக்குகளை பராமரிக்க தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்ய - ஊர் மையத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில்
உள்ள இந்த இடம் தொழில்நுட்ப ரீதியாக பொருத்தமாக கருதப்படுமா என்பதும் கேள்விக்குறியே.
நாட்டில் பயன்பாட்டில் உள்ள பயோ காஸ் திட்டங்கள் பல - மக்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முதலில்
தமிழகத்தில் நிறைவு செய்துள்ள ஆற்காடு நகராட்சியில் - இத்திட்டம், வீட்டு வசதி வாரிய வளாகத்திலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய காயல்பட்டினம் நகராட்சிக்கு தேவையான குப்பைக்கொட்டுவதற்கான இடம் தேடல் இன்றும் தொடருகிறது. |