பள்ளிகளுக்கிடையிலான - மாவட்ட அளவிலான ஸ்பிக் ட்ராஃபி க்ரிக்கெட் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
ஸ்பிக் ட்ராஃபி:
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான 8ஆவது ஸ்பிக் ட்ராஃபி க்ரிக்கெட் போட்டி இம்மாதம் 07ஆம் தேதி முதல், ஸ்பிக், சாதர் சாகன் மற்றும் ஹெவி வாட்டர் பிளான்ட் மைதானங்களில் நாக்கவுட் முறையில் நடைபெற்று வருகின்றது.
துவக்கப் போட்டி:
மாவட்டம் முழுதிலுமிருந்து 34 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தனது முதல் போட்டியில், பசுவந்தனை அரசு மேநிலைப்பள்ளி அணியுடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய எல்.கே.பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 8 வீரர்களை இழந்து 86 ஓட்டங்களை எடுத்திருந்தது. அந்த அணிக்காக இஜாஸ் 21 ஓட்டங்களும், ஜியாவுத்தீன் 23 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பசுவந்தனை அணி 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்து தோல்வியடைந்தது. எல்.கே.பள்ளி அணிக்காக அஸாருத்தீன் 4 வீரர்களையும், சரவணன் 3 வீரர்களையும், ஜியாவுத்தீன் 2 வீரர்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக எல்.கே.மேனிலைப் பள்ளியின் ஜியாவுத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டி:
இரண்டாவது போட்டியில் எல்.கே.பள்ளி அணி சவலப்பேரி அரசு மேனிலைப் பள்ளி அணியுடன் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய எல்.கே. பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 வீரர்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணிக்காக இஜாஸ் 49 ஓட்டங்களையும், அல்தாஃப் 26 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய சவலப்பேரி அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 9 வீரர்களை இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர். எல்.கே.பள்ளி அணிக்காக ஜியாவுத்தீன் 3 வீரர்களையும், புவனேஷ் 2 வீரர்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் இஜாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டி:
மூன்றாவது போட்டியில் பலம் வாய்ந்த விளாத்திகுளம் அணியுடன் மோதிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 19.4 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணிக்காக ஜியாவுத்தீன் 40 ஓட்டங்களையும், அபுல்ஹஸன் 25 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விளாத்திக்குளம் அணியினர் 16.1 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் பறிகொடுத்து தோல்வியுற்றனர். எல்.கே.பள்ளி அணிக்காக அஸாருத்தீன் 3 வீரர்களையும், ஜியாவுத்தீன் மற்றும் அல்தாஃப் தலா 2 வீரர்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே.பள்ளி அணியின் ஜியாவுத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
காலிறுதிப் போட்டி:
காலிறுதிப் போட்டியில் கமலாவதி மேனிலைப்பள்ளி அணியுடன் மோதிய எல்.கே. பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 9 வீரர்களை இழந்து 82 ஓட்டங்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய கமலாவதி அணியினர் 16.1 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு அனைத்து வீரர்களையும் இழந்து தோல்வியடைந்தனர். எல்.கே.பள்ளி அணிக்காக அல்தாஃப் 3 வீரர்களையும், அஸாருத்தீன் 3 வீரர்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே.பள்ளி அணியின் அல்தாஃப் தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதிப் போட்டி:
அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட குளத்தூர் அணியுடன் விளையாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 9 வீரர்களைகளை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்தது. அந்த அணிக்காக அஸாருத்தீன் அதிரடியாக விளையாடி 29 ஓட்டங்களையும், அல்தாஃப் 18 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
தொடர்ந்து விளையாடிய குளத்தூர் அணி 17.4 ஓவரில் 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்தது தோல்வியடைந்தது. எல்.கே.பள்ளி அணிக்காக அம்மார் 4 ஓவர்கள் வீசி, 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, 2 வீரர்களை வீழ்த்தினார். சரவணன் 3 வீரர்களையும், ஜியாவுத்தீன் 3 வீரர்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக எல்.கே. பள்ளி அணியின் அம்மார் தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்குத் தகுதி:
இவ்வெற்றியை அடுத்து எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இம்மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில், பழைய காயல் புனித அந்தோனியர் மேனிலைப்பள்ளி அணியுடன் அது மோதவுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |