காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாட்டில் இன்று (நவம்பர் 19) உலக கழிப்பறை தினம் (WORLD TOILET DAY) கடைபிடிக்கப்பட்டது. காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கழிப்பறையை இன்று பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து இன்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ்,
5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், 16வது வார்டு உறுப்பினர் சாமு சிஹாபுதீன், 17வது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத், நகராட்சி
ஊழியர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் இந்த தினம் குறித்த துண்டு பிரசுரத்தை நகர்மன்றத் தலைவர் விநியோகம் செய்தார்.
நவம்பர் 19 ம் தேதியை - ஒவ்வொரு ஆண்டும் - உலக கழிப்பறை தினம் (WORLD TOILET DAY) என கடைபிடிக்க, கடந்த ஜூலை மாதம் 24 ம் தேதியன்று, 120 நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் முன்மொழிந்த "அனைவருக்கும் சுகாதாரம் (SANITATION FOR ALL) தீர்மானம்" (A/RES/67/291), ஐக்கிய நாட்டு சபையில் நிறைவேறியது. ஐக்கிய நாட்டு சபையில் சிங்கப்பூர் முன்மொழிந்த முதல் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
உலகெங்கும் 250 கோடி மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் 110 கோடி பேர் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும், சுமார் 2000 குழந்தைகள் தினமும் - தவிர்க்கக்கூடிய வைத்துப்போக்கினால் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாட்டு சபையின் அங்கீகாரம் இவ்வாண்டு தான் கிடைத்தது என்றாலும், உலக கழிப்பறை தினம், 2001 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் டாய்லெட் என அழைக்கப்படும் சிங்கப்பூரை சார்ந்த தொழிலதிபர் ஜாக் சிம் - உலக கழிப்பறை அமைப்பினை 2001 இல் துவக்கினார். அவரின் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக இந்த தினம் மூலம் கழிப்பறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புகைப்படங்கள்:
வீனஸ் ஸ்டுடியோ |