காயல்பட்டினம் 05ஆவது வார்டுக்குட்பட்ட கி.மு.கச்சேரி தெருவில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தோட்டக் கழிவுகளை எடுக்காமல் சென்றதாகக் கூறி, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை 09.40 மணியளவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி ஆகியோர், பொதுமக்கள் - துப்புரவுப் பணியாளர்களுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்தினர். பின்னர் அக்குப்பை அள்ளியெடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து, துப்புரவுப் பணியாளர்கள் கூறுகையில், “வீடுகளில் சேகரமாகும் உணவுக் கழிவுகள் உள்ளிட்ட அன்றாடக் குப்பைகளை எடுத்துச் செல்லவே நாங்கள் பணிக்கப்பட்டுள்ளோம்... ஆனால், பொதுமக்கள் பலர், தமது தோட்டங்களைத் துப்புரவு செய்த பின்னர், பெரிய அளவிலான மரக்கிளைகள் உள்ளிட்ட அளவு கூடுதலான குப்பைகளை சாலையோரத்தில் வைத்துச் சென்றுவிடுகின்றனர்... இவற்றை நாங்கள் அள்ளியெடுத்துச் செல்வதானால், அனைத்து வீடுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளைக் குறித்த நேரத்தில் சேகரிப்பதற்கு வண்டியில் இடமிருக்காது... இதை அவர்கள் புரிந்துகொள்வதேயில்லை...” என்றனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களோ, “இந்த தென்னை மர ஓலைகளை எடுத்துச் செல்லுமாறு பத்து நாட்களுக்கும் மேலாக நாங்கள் கூறி வருகிறோம்... காசு கேட்டனர்... 30 ரூபாயும் கொடுத்துள்ளோம்... இருந்தும் அள்ளிச் செல்லவில்லை...” என்றனர்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், “வீடுகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை அள்ளிச் செல்வதுதான் துப்புரவுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி... அதற்கு மேல் வேறு பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்த வேண்டுமானால், நகராட்சிக்கு சிறப்பு வேண்டுகோள் வைக்க வேண்டும்...
குப்பைகளை சேகரிப்பதற்கு அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கிக் கொண்டிருக்க, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணம் அளித்து வேலை வாங்குவது போன்ற நடவடிக்கைகளில் அறிந்தோ, அறியாமலோ பொதுமக்கள் ஈடுபடுவதாலேயே இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது...” என்றார்.
அவரது இக்கருத்தை, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீரும் ஆமோதித்துப் பேசினார். “இதுபோன்ற சர்ச்சைகள் எழும்போது, ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டு பிரச்சினைகளைப் பெரிதாக்குவதைத் தவிர்த்து, துப்புரவுப் பணியாளர்கள் அப்போதைக்கு குப்பைகளை அள்ளியெடுத்துவிட்டு, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிச் செல்வதே அறிவார்ந்த செயலாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, “நகரில் சேரும் குப்பைகளை சேகரித்து எடுத்துச் செல்வதற்காக நகராட்சியில் 3 வாகனங்கள் உள்ளன... அவற்றுள் ஒன்று வாகன பரிசோதனைக்காகவும், மற்றொன்று பழுது நீக்குவதற்காகவும் சென்றுள்ளது...
தோட்டங்களை துப்புரவு செய்வோர், செலவோடு செலவாக அங்கு சேரும் குப்பைகளையும் தம் பொறுப்பிலேயே அகற்றி அப்புறப்படுத்தலாம்... நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு பணி செய்ய வேண்டியிருந்தால், அதற்காக நகராட்சியிடம் அவர்கள் சிறப்புக் கோரிக்கை வைக்கும்போது, அதற்கான - சாத்தியப்படும் ஏற்பாடுகளை நிச்சயம் நகராட்சி செய்து கொடுக்கும்...
அதுபோல, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களையொட்டி விருந்து வைபவங்கள் நடத்தும்போதும், அங்கு சேரும் ப்ளாஸ்டிக் கோப்பை உள்ளிட்ட கழிவுகளை அப்படியே சாலையோரத்தில் மொத்தமாகக் கொட்டுவது வழமையாக உள்ளது. இவற்றை பொதுமக்கள் தவிர்த்து, நமதூரை சுத்தமாக வைக்க அனைவரும் முன்வர வேண்டும்...
ஊரின் அனைத்துப் பகுதிகளையும் நம் பகுதியாகக் கருதி, எல்லா இடங்களிலும் தங்குதடையின்றி பராமரிப்புப் பணிகள் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்...” என்றார். |