காயல்பட்டினத்தைச் சேர்ந்த கட்டிடக் கலை பொறியாளர்கள் இருவரின் வடிவமைப்பு மற்றும் கூட்டு முயற்சியில், ஹாங்காங் நாட்டில் பள்ளிவாசல் ஒன்று புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
புதிய பள்ளிவாசல் திறப்பு விழா:
ஹாங்காங் நாட்டின் நடுவிலுள்ள கவ்லூன் நகரில் யாவ் மா தீ என்ற பகுதியில், மஸ்ஜித் இப்றாஹீம் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று லுஹ்ர் தொழுகையுடன் திறப்பு விழா கண்டது. தொழுகைக்கான முதல் அழைப்பொலியை (அதான்), ஹாங்காங் கவ்லூன் பெரிய பள்ளியின் இமாமும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ ஒலிக்க, அதனைத் தொடர்ந்து தொழுகை நடைபெற்றது.
சுமார் 700 பேர் பங்கேற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில், சில முஸ்லிம் நாடுகளின் - ஹாங்காங் நாட்டிற்கான தூதர்களும், ஹாங்காங் அரசு அதிகாரிகளும் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கட்டிட அமைப்பு:
புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக, ஹாங்காங் அரசின் சார்பில் 4900 சதுர அடி பரப்பிலான நிலம் குத்தகையாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 2200 சதுர அடி அளவில் இப்புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. தொழுகை தளம், இரு பாலருக்கான கழிப்பறை வசதிகள், உளூ (சுத்தம்) செய்வதற்கான இடம், கலந்தாலோசனைக் கூடம், பொருட்பாதுகாப்புக் கிடங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்புதிய கட்டிடம் அமைந்துள்ளது.
முன் முயற்சிகள்:
இப்பகுதியில் பள்ளிவாசல் நிர்மாணிப்பது அவசியம் என்பதையுணர்ந்த சில முஸ்லிம்கள், 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், United Welfare Union - Hong Kong என்ற பெயரில் அமைப்பொன்றைத் துவக்கி, புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கான நிலத்தை அரசிடமிருந்து கோரிப் பெற்றிடுவதற்காக, ஹாங்காங் உள்விவகாரத் துறையின் துணையோடு, அந்நாட்டின் நில விவகாரத் துறையை அணுகியது இவ்வமைப்பு.
துவக்கத்தில், ஒரு வருட குத்தகை அடிப்படையில், யாவ் மா தீ-யிலுள்ள Dundas Streetஇல் 2530 சதுர அடியில் நிலமொன்றை வழங்க அரசு முன்வந்துள்ளது. எனினும், ஒரு வருடம் நிறைவடைந்த பின், அவ்விடம் வேறு வகை கட்டுமானத்திற்காக விற்பதற்கு அரசால் திட்டமிடப்பட்டிருந்தமையால், அது ஏற்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து. தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடத்தை 2012ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹாங்காங் அரசு வழங்கியது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் - பேரங்களையடுத்து, 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று - 2 வருட குத்தகை அடிப்படையில் இந்நிலத்தை அரசு வழங்க இசைந்தது.
நீண்ட கால அளவில் குத்தகைக்கு அரசால் நிலம் வழங்க இயலாத நிலையைக் கருத்திற்கொண்டு, பல்வேறு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டு, நிறைவில் அல்லாஹ்வின் மீது பாரத்தை விட்டு, இரண்டாண்டு குத்தகை அடிப்படையில் நிலத்தைப் பெற்று பள்ளிவாசலைக் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குத்தகை மற்றும் வாடகை ஒப்பந்த ஆவணங்கள் கைச்சான்றிடப்பட்டு, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 01ஆம் தேதியன்று - இரண்டாண்டு குத்தகை அடிப்படையில் இந்நிலம் பெறப்பட்டது. துவக்கத்தில், 12,960 ஹாங்காங் டாலர் மதிப்பில் வாடகை தொகை அரசால் முன்வைக்கப்பட்டது. வேண்டுகோளையடுத்து அது 3,070 ஹாங்காங் டாலராக குறைக்கப்பட்டது.
கட்டிடப் பணிகள்:
பள்ளிவாசல் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பிப்ரவரி 03ஆம் தேதியன்று அஸ்திவாரம் இடப்பட்டது. சுமார் 300 பேர் பங்கேற்ற அந்நிகழ்வில், பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காக அந்த இடத்திலேயே நிறைவான நன்கொடை பெறப்பட்டது. பள்ளிவாசல் கட்டிட முன்வடிவப் படம் - அரசின் கட்டிட விவகாரத் துறையால் ஏற்கப்பட்டதையடுத்து, 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டிடப் பணி துவக்கப்பட்டு, அக்டோபர் மாதம் புதிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டது.
காயல் பொறியாளர்கள் வடிவமைப்பு:
புதிய பள்ளிவாசலுக்கான திட்டப்படத்தை - ஹாங்காங் நாட்டில் பொறியாளர்களாகப் பணியாற்றி வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கட்டிட பொறியாளர்களான எம்.செய்யித் அஹ்மத், பி.எம்.ஐ.அப்துல்லாஹ் ஜவ்ஹரீ ஆகியோர் - தாமாகவே முன்வந்து, கட்டணம் எதுவும் பெறாமல் தன்னார்வத்துடன் வடிவமைத்துள்ளனர்.
கட்டிடத்திற்கான நிலத்தை அரசிடமிருந்து பெறுவதற்கான முன் முயற்சிகள், கட்டிடப் பணிகளின்போது உரிய நேரங்களில் முறையான மேற்பார்வை உள்ளிட்ட பணிகள் - ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து இவ்விரு பொறியாளர்களால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிறைவான நன்கொடை:
பள்ளி கட்டிடப் பணிக்குத் தேவையான நிதி நன்கொடை மூலம் ஏற்கனவே முழுமையாகப் பெறப்பட்டுவிட்டது. வருங்கால மேம்பாட்டுப் பணிகள், பள்ளி பராமரிப்பு மற்றும் இயங்குவதற்கான செலவினங்களுக்காக 30 லட்சம் ஹாங்காங் டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகைக்காக 23 லட்சம் ஹாங்காங் டாலர் இதுவரை பெறப்பட்டுள்ளது.
பள்ளி அமைந்துள்ள இடம் குறைந்த கால குத்தகை அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளமையால், ஏற்கனவே ஆயத்தம் செய்யப்பட்ட - பிரித்துப் பொருத்தும் வகையிலான கட்டிடப் பொருட்களால் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வருங்காலத் திட்டம்:
குத்தகைக் காலம் 2014 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதால், அதனை நீட்டித்து - நிரந்தர குத்தகைக் காலமாகப் பெறுவதற்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, மஸ்ஜித் இப்றாஹீம் பள்ளிவாசலை நிர்வகித்து வரும் United Welfare Union - Hong Kong அமைப்பால் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
பொறியாளர் M.செய்யித் அஹ்மத் உதவியுடன்
ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ்
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 01:30 / 07.12.2013] |