வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து, தற்போது தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது வெள்ளிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி சென்னையில் இருந்து தென்கிழக்கே 530 கி.மீ. தூரத்திலும், திரிகோணமலையில் (இலங்கை) இருந்து வடகிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது சனிக்கிழமையன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதன் பின்னர் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. புயலாக மாறினால் அதற்கு "மாடி' என்று பெயரிடப்படும்.
புயலாக மாறும் இது, வடக்கு திசையிலும் பின்னர் வடகிழக்கு திசையிலும் நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் எனவும் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
வானிலை முன்னறிவிப்பு:
தமிழகம் மற்றும் புதுவையின் கடலோரப் பகுதிகளின் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ சனிக்கிழமை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெரியகுளத்தில் 70 மி.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 50 மி.மீ. மழையும் பெய்துள்ளது. காரைக்கால் (30 மி.மீ.), திருத்துறைப்பூண்டி (20 மி.மீ.), வேதாரண்யம், திருவாரூர் (10 மி.மீ.) ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.
தகவல்:
தினமணி |