ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை பெற பொது மக்கள், பொதுவாக திருசெந்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தை நாடுவது வழக்கம். காயல்பட்டினத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும் சில சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என்ற வசதியும் உள்ளது. இருப்பினும் - இவ்வழிகள் மூலம் சான்றிதழ்களை பெற காலதாமதம் ஆவது உண்டு.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் - சமீபத்தில் இச்சான்றிதழ்களை அரசு அலுவலகங்களை தவிர அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்களின் மூலமும் பெறலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து ஆறுமுகநேரி போன்ற ஊர்களில் வங்கிகள் இச்சேவையை வழங்க முன்வந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சியான காயல்பட்டினத்திலும் இச்சேவை அறிமுகம் செய்யப்படவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS யை செப்டம்பர் மாதம் சந்தித்த நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தரும்படி மாவட்ட ஆட்சியர் அவ்வேளையில் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து - செப்டம்பர் மாத நகர்மன்ற கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் (தீர்மானம் எண் 598) நிறைவேற்றப்பட்டது.
தீர்மான நகல் மாவட்ட ஆட்சியற்கு அனுப்பப்பட்டதை அடுத்து - நவம்பர் 28 அன்று - தூத்துக்குடி மாவட்ட கேபிள் தொலைகாட்சி சம்பந்தமான சிறப்பு தாசில்தார் ராமசாமி, இச்சேவையை காயல்பட்டினத்தில் துவக்க தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இடத்தை பார்வையிட்டார். இதற்கு முன்னர் குடிநீர் கட்டணம் வசூல் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த பார்வையிடப்பட்ட இந்த அறையில், சிறு பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறைவு செய்தால் - இச்சேவையை காயல்பட்டினத்தில் விரைவில் துவக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து - தற்போது தினத்தந்தி நாளிதழின் இன்றைய பதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கான மதிப்பீடாக ரூபாய் 3 லட்சம் கணக்கிடப்பட்டுள்ளது. பணியினை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் தகுதியாக 5க்கும் மேலான வகுப்பு என்றும், இப்பணியினை ஒரு மாதத்தில் முடிக்கவேண்டும் என்றும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தபுள்ளி படிவம் டிசம்பர் 30 வரை வழங்கப்படும் என்றும், டிசம்பர் 31க்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் மேலும் விளம்பரம் தெரிவிக்கிறது.
|