சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நகர்நல வருடாந்திர திட்டங்களுள் ஒன்றான - ஏழை எளியோருக்கு பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டம், நேற்று (ஜனவரி 23 அன்று) நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தெரிவித்துள்ளதாவது:-
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களால் - தாமாக முன்வந்து செய்யப்படும் உதவித் திட்டமான பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டத்தின் கீழ், நடப்பு வினியோகத்திற்கான நல்லுடைகளை – சிங்கப்பூரில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் உறுப்பினர்கள் குறித்த காலத்தில் சேர்ப்பித்தனர். அவை புத்தாடைகள் போல பெட்டிகளில் அடைக்கப்பட்டு, வெவ்வேறு கப்பல்கள் மூலம் காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடைகளை வழங்கிய உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், 2013 அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவற்றை கப்பல்கள் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளைச் செய்த உறுப்பினர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கும் எம் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெறப்பட்ட உடைகள் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் முறையாகப் பிரித்து அடுக்கப்பட்டு, ஏழை-எளியோருக்கு வினியோகிக்கப்பட்டது.
உடைகளை வகைப்படுத்தும் பணியில் இணைந்து செயலாற்றிய இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், பொதுநல ஊழியர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, எம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் ஆகியோருக்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறை நாட்டத்துடன், இத்திட்டம் வரும் வருடங்களிலும் தொடர்ந்து செய்யப்படும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தெரிவித்துள்ளார். |