மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட சின்னதுரைக்கு பதிலாக ஏ.கே.செல்வராஜ் புதிய வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
இது தவிர, அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பதவியில் இருந்தும் சின்னத்துரை நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக சார்பில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கட்ந்த 23-ஆம் தேதியன்று, அதிமுக ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி,
1. எஸ்.முத்துக்கருப்பன் (நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர்)
2. என்.சின்னத்துரை (இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர்)
3. எல்.சசிகலா புஷ்பா (மகளிர் அணிச் செயலாளர்)
4. விஜிலா சத்யானந்த் (நெல்லை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட சின்னதுரை திடீரென இன்று நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீக்கம் ஏன்...?
ஊழல் காரணமாகவே சின்னதுரை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு 2010ம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அப்போது ஊழல் செய்ததாக, 2013ம் ஆண்டு திருச்செந்தூர் நாடாளுமன்ற தொகுதி ஆதிதிராவிடர் நல சங்க தலைவர் கணேசன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த ஊழல் குறித்து கூடுதல் இயக்குனர் ராஜாமணி தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணையில் சின்னதுரை ரூ.2 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார் என்று அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விஜிலென்ஸ் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக சின்னதுரை அறிவிக்கப்பட்டதை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் கணேசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், சின்னத்துரை மாநிலங்களைவை வேட்பாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தகவல்:
தி இந்து
மற்றும்
www.tutyonline.net
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 25.01.2014 / 4:45 pm] |