இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான
அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரம் வெளிவரலாம் எனவும் தெரிகிறது.
முடிவுக்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - மொத்த இடங்களான 543 இடங்களில் - 262
இடங்கள் பெற்றிருந்தது. அதில் காங்கிரஸ் பெற்ற 206 இடமும், திரிணமுல் காங்கிரஸ் பெற்ற 19 இடமும், தி.மு.க. பெற்ற 18 இடமும்
அடங்கும்.
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 159 இடங்கள் பெற்றிருந்தது. அதில் பி.ஜே.பி. பெற்ற 116 இடமும், ஜனதா தளம்
(ஐக்கியம்) பெற்ற 20 இடமும், சிவ சேனா பெற்ற 11 இடமும் அடங்கும்.
இத்தேர்தலில் மூன்றாவது அணி - 79 இடங்கள் பெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெற்ற 16 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற 4
இடமும், பி.எஸ்.பி. பெற்ற 21 இடமும், பிஜு ஜனதாதள் பெற்ற 14 இடமும், அ.இ.அ.தி.மு.க. பெற்ற 9 இடமும், தெலுகு தேசம் பெற்ற 6
இடமும், ம.தி.மு.க. பெற்ற 1 இடமும் அடங்கும்.
சமாஜ்வாதி கட்சி 23 இடம் பெற்றது.
2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் - ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 27 இடங்களை வென்றது. அதில் தி.மு.க. வென்ற
18 இடமும், காங்கிரஸ் வென்ற 8 இடமும், விடுதலை சிறுத்தைகள் வென்ற 1 இடமும் அடங்கும். மேலும் பதிவான் மொத்த வாக்குகளில்
இவ்வணி 42.5 சதவீத வாக்குகளையும் பெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உருவாகவில்லை. பி.ஜே.பி. தனியாக நின்று 2.3 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க. தனியாக நின்று
10.3 சதவீத வாக்குகளும் பெற்றன.
மூன்றாம் அணி 12 இடங்களைப் பெற்றது. இதில் அ.தி.மு.க. பெற்ற 9 இடங்களும், ம.தி.மு.க. பெற்ற 1 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பெற்ற 1 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற 1 இடமும் அடங்கும். பா.ம.க. ஒரு இடமும் பெறவில்லை. இவ்வணி பதிவான் மொத்த
வாக்குகளில் 38 சதவீத வாக்குகளையும் பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக கூட்டணிக் காட்சி மாறியிருந்தது.
அ.தி.மு.க. அணியில் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சி தவிர புதிதாக தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய
தமிழகம் ஆகியவை இடம்பெற்றன. பதிவான மொத்த வாக்குகளில் இக்கூட்டணி 51.9 சதவீதம் வாக்குகள் பெற்றது. 234 இடங்களில் 203 இடங்களையும்
பெற்றது.
தி.மு.க. அணியில் - காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இக்கூட்டணி, பதிவான வாக்குகளில் 39.5 சதவீதம் வாக்குகள் பெற்றது. 234 இடங்களில் 31 இடங்களையும் பெற்றது.
2014ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவிலான கூட்டணிக் காட்சி இன்னும் முழு வடிவம் பெறவில்லை.
தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. கூட்டணியில் - அதன் சட்டசபை கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய
தமிழகம் ஆகியவை - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் தொடருகின்றன என்பதனை - பிப்ரவரி 07 அன்று நடைபெறவுள்ள ராஜ்ஜிய சபா தேர்தலில், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு வழங்கியுள்ளது ஊர்ஜிதம் செய்துள்ளது. வேறு எந்த பெரிய கட்சியுடனும் அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பில் அதற்காக பெரிய முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள்
வெளிவரவில்லை.
தி.மு.க. கூட்டணியில், சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என்பது உறுதியாகி உள்ளது. புதிய தமிழகம் கட்சியும் தி.மு.க. அணிக்கு மாறும் என்று தெரிகிறது. முன்னரே தி.மு.க. அணியில் - சட்டமன்ற தேர்தலின்போது - இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும், முஸ்லிம் லீக் கட்சியும் - அவை தி.மு.க. அணியில் தொடரும் என அறிவித்துள்ளன.
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என தி.மு.க. தனது பொதுக் குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தாலும், அண்மையில் நடந்த சில சந்திப்புகள் (கருணாநிதி - குலாம் நபி ஆசாத்; சோனியா காந்தி - கனிமொழி), தி.மு.க.வின் காங்கிரஸ் குறித்த முந்தைய அறிவிப்பு இறுதியானது அல்ல என எண்ணத் தூண்டுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றால் - விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
பி.ஜே.பி. அணியில் ம.தி.மு.க. இணைவது உறுதியாகி உள்ளது. பா.ம.க. கட்சியும் பி.ஜே.பி. உடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் - பி.ஜே.பி. விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியையும் அதன் கூட்டணியில் இணைக்க
விரும்புவதை பா.ம.க. ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில், தே.மு.தி.க. கட்சியை தன் அணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மு.க.அழகரி கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது, தே.மு.தி.க.வை திருப்திபடுத்தத்தான் எனவும் கூறப்படுகிறது.
கூட்டணிகள் இறுதி நிலவரம் - தே.மு.தி.க.வின் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள பிப்ரவரி 02 மாநில மாநாட்டிற்கு பிறகு தெளிவாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வைப் பொருத்த வரை - பல்வேறு கூட்டணிகளாக எதிர்கட்சிகள் இருப்பதையே விரும்புவது போல் தெரிகிறது. அதனால் வாக்குகள்
சிதறுவதால், அ.தி.மு.க.விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில் அது உள்ளது.
எந்த கூட்டணி என இதுவரை முடிவை அறிவிக்காத இரு பெரிய கட்சிகளில் - தே.மு.தி.க.வை தன் வசம் இழுத்தால், கூட்டணி பலம் அடையும்
என தி.மு.க. நினைக்கிறது.
அண்மைக் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ள தே.மு.தி.க. - தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அவசர கதியில் எடுக்க விரும்புவதாகத் தெரியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தல் போல் தனித்து நின்று - இம்முறை அக்கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புகள் குறைவு.
பாராளுமன்றத் தேர்தலை விட, இரு ஆண்டுகள் கழித்து நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலே தன் கட்சிக்கு முக்கியம் என விஜயகாந்த் முடிவெடுத்தால், தே.மு.தி.க. - தி.மு.க. அணி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம்.
தே.மு.தி.க., பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், அவ்வணியில் பா.ம.க. சேரும் வாய்ப்பே அதிகம்.
கூடுதல் தகவல்:
விக்கிபீடியா |