இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று காலை 08.30 மணிக்கு நடைபெற்றது.
கொடியேற்றம்:
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். வாகன ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர்.
வாழ்த்துரை:
நகர்மன்ற உறுப்பினர்களான கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், ஜெ.அந்தோணி, இ.எம்.சாமி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.பாக்கியஷீலா, அரிமா சங்கத்தைச் சேர்ந்த ஆர்.பி.ஷம்சுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலைமையுரை:
நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் தலைமையுரையாற்றினார்.
2011-2012, 2012-2013 காலகட்டத்தில் நகரில் சாலைப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், 2013.-2014ஆம் ஆண்டு சாலைப்பணிகள் - இரண்டாவது பைப்லைன் திட்டப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், நகராட்சியின் பழைய கட்டிடத்தை அகற்றி, புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு 1.5 கோடி தொகையில் திட்டம் தீட்டி, 1 கோடி ரூபாயை அரசு அளிப்பதாகவும், 50 லட்சம் ரூபாய் நகராட்சியின் பங்களிப்பாக கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி, அதற்கான தொழில்நுட்ப ஒப்புதலைப் (Technical Sanction - TS) பெறுவதற்காக இன்று சென்னை செல்லவுள்ளதாகவும் கூறினார்.
பயோகேஸ் திட்டத்திற்கு அரசு தொகை ஒதுக்கித் தந்துள்ளதாகக் கூறிய அவர், இத்திட்டத்திற்குத் தகுந்த ஓரிடத்தைத் தேர்வு செய்திட நகராட்சிக்கு நகர மக்கள் ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றினார்.
நேர்மையான ஊழியருக்கு நகர்மன்றத் தலைவர் பரிசு:
கடந்த சில நாட்களுக்கு முன், காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் - ரூபாய் 30 ஆயிரம் தொகை உட்பட பல மதிப்புள்ள பொருட்களைக் கொண்ட கைப்பையை ஒரு பயணி மறந்து விட்டுச் சென்றுவிட்டார். அப்போது நகராட்சியின் சார்பில் அங்கு பணியிலிருந்த ஊழியர் பட்டாணி, அப்பையை எடுத்து பத்திரப்படுத்தி, பொருட்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட நிலையில் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவரது நேர்மையைப் பாராட்டி, இவ்விழாவின்போது நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவருக்கு பணப்பரிசு வழங்கிப் பாராட்டினார். நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் அவருக்கு நகராட்சியின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
நேர்மை என்பது எல்லோரிடமும் இருக்க வேண்டியதே என்றும், எனினும் தனது இச்செயலைப் பாராட்டி இந்த விழாவில் கவுரவித்ததும் தன்னைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக, ஊழியர் பட்டாணி மனம் நெகிழ பேசினார்.
தேச ஒற்றுமைப் பாடல்:
பின்னர் அனைவரும் இணைந்து, மறைந்த கவிஞர் ‘காயல் பிறைக்கொடியான்’ எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் இயற்றிய தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலைப் பாடினர்.
நிகழ்ச்சி நெறியாளர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெக்ஷ்மி, அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும், நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் - நகராட்சியின் சார்பில் இனிப்பு வழங்கினார்.
குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, நகராட்சியின் துப்புரவு பெண் பணியாளர்கள் இணைந்து - விழா நடைபெற்ற வளாகம் முழுக்க பல வண்ணங்களில் கோலங்களை வரைந்திருந்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |