பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், இம்மாதம் 31ஆம் தேதியன்று, இந்திய தமிழ் மீனவர்களுக்காக ராமேஸ்வரம் மண்டபம் நகரில் நடத்தப்படும் ‘கடல் தாமரை’ மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினம் கடலோரப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருமலைச்சாமி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று 14.00 மணியளவில் காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் கூறியதாவது:-
அண்மைக் காலமாக இந்திய தமிழ் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் உயிர்களையும், உடமைகளையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.
இவர்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பாராமுகமாக இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய உச்சநீதிமன்றமும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது. மீனவர்களை நாடு பாதுகாக்கத் தவறினால் அவர்களின் வாழ்வு மட்டுமின்றி, நம் நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும்.
இந்தியாவில் அடுத்து வரும் ஆட்சி பாஜக தலைமையிலான ஆட்சியாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அந்நேரத்தில் இந்திய தமிழ் மீனவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர இயலும் என்பன குறித்து ஆலோசிப்பதற்காகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காகவும், ராமேஸ்வரம் - மண்டபம் நகரில் வரும் 31ஆம் தேதியன்று மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை, ‘கடல் தாமரை மாநாடு’ என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கடலோரப் பகுதிகளிலுள்ள அனைத்து மீனவ மக்களையும் சந்தித்து அழைப்பு விடுக்கும் பணியை கடந்த 3 நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் துவங்கி, இதுவரை 25 மீனவ கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளேன்.
இன்று காயல்பட்டினம் சிங்கித்துறை, கொம்புத்துறை பகுதிகளுக்கும், அதனைத் தொடர்ந்து புன்னைக்காயல், தூத்துக்குடி என ராமேஸ்வரம் வரையிலும், வரும் 31ஆம் தேதி வரை பயணித்துச் சென்று, ஆங்காங்கேயுள்ள எங்கள் கட்சியின் நிர்வாகிகள் துணையுடன் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளேன்.
இவ்வாறு, பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருமலைச்சாமி கூறினார். கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் என்.மகேஷ் கண்ணன், கேந்திர பொறுப்பாளர் ஏ.பண்டாரம், நகர பொருளாளர் செபஸ்தியான், 07ஆவது வார்டு கிளை தலைவர் சுரேஷ் மோட்சையா, 12ஆவது வார்டு கிளை தலைவர் ஐ.காளிமுத்து, சிவசெந்தில், ஒன்றிய தலைவர் எல்.பி.ஆர்.தனம், மீனவரணி மாவட்ட பொதுச் செயலாளர் டி.ஸ்ரீ கிருஷ்ணகுமார், ஒன்றிய துணைத்தலைவர் பி.முத்துகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.மணிபிள்ளை, ஒன்றிய செயலாளர் சூசை எஸ்.சத்தீஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
|