அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் விபரங்கள் சேகரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
2010ஆம் ஆண்டில், அரசு சார்பில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பதிவு செய்தோரின் விபரங்கள் மட்டுமே இக்கணக்கெடுப்பின்போது பதிவுசெய்யப்பட்டது.
அதில் விடுபட்டவர்களது விபரங்களைப் பதிவு செய்திட தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கான படிவம் காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இன்று காலையில் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்ற உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், படிவங்கள் வார்டு வாரியாக பிரித்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும், விடுபட்டோரைப் பதிவு செய்திட அந்தந்த வார்டு பகுதிகளிலுள்ள பொதுநல அமைப்பினரும் நகர்மன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது விபரம் சமர்ப்பிக்காமல் விடுபட்டுப்போன பொதுமக்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அரசால் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அக்கணக்கெடுப்பில் விபரம் சமர்ப்பித்து, வார்டு வாரியாக நடைபெற்று முடிந்துள்ள விபரங்கள் சேகரிப்பு முகாமில் பங்கேற்காத பொதுமக்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை விபரங்களைப் பதிவு செய்யாதோர், அவரவர் வார்டு உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:25 / 25.01.2014] |