தோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில் இன்பச் சிற்றுலா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தோப்புக் குளியல், புலிக்குகை விஜயத்துடன் இனிதே முடிந்தது KCGC-ன் இன்பச்சிற்றுலா!
சென்னையில் உள்ள காயல்வாசிகளுக்காக ஆண்டிற்கு ஓரிருமுறை என நமது KCGC அமைப்பின் மூலமாக நடத்தப்பட்டு வரும் இன்பச்சிற்றுலா சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 7 மணி முதலே சிற்றுலாக்காக முன்பதிவு செய்திருந்த காயலர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட இடங்களான மண்ணடி, எழும்பூர் மற்றும் கெல்லிஸிலிருந்து புறப்படுவதற்காக குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
.........
காலை 8 மணிக்கு சென்னை மண்ணடியிலிருந்து புறப்பட்ட பேருந்து எழும்பூர் வழியாக வந்து அங்கு காத்துக் கொண்டிருந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு முதலில் புறப்பட்டது. அடுத்து கெல்லிஸிலிருந்து நேரடியாக இரண்டாவது பேருந்து புறப்பட்டது.
தினமும் பல்வேறு அலுவல்கள், வீட்டு வேலைகள், பள்ளிக்கூடம் செல்லுதல் என பரபரப்புடன் இயங்கி வரும் பல வயதினரையும் உள்ளடக்கி குடும்ப சகிதமாக வந்திருந்தவர்களைச் சுமந்துக்கொண்டு சென்னையின் முக்கிய வீதிகளைக் கடந்து செனடாப் சாலை வழியாக அண்ணா நூலகம், அதைத் தொடர்ந்து காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராஜீவ்காந்தி சாலை வழியாக காலை 9 மணிக்கு நாவலூரில் உள்ள அபூ கார்டனுக்கு இரண்டு பேரூந்துகளும் சென்றடைந்தன.
பயணத்தின் போது கண்டு களித்த அண்ணா நூலக கட்டடம், பல்வேறு பூங்காக்கள், விரிவான சாலைகள், அதன் நடுவே நாட்டப்பட்டிருந்த ஈச்சமரம், கித்தில்(பானி)மரம், பரக்கும் ரயில் என அழகழகான மரங்கள், தகவல் தொழில் நுட்பத்திற்காக கட்டப்பட்டுள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் என உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளினூடே பயணக்குழு தோப்பிற்குள் திளைப்புடன் நுழைந்தது.
முதலில் வந்திருந்த அனைவருக்கும் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காலை உணவான இட்லி, சட்னி, சாம்பார் பரிமாறப்பட்டு அடுத்து தேநீரும் வழங்கப்பட்டது.
அடுத்து, வந்திருந்த ஆண்களிடம் KCGC-ன் உறுப்பினராகும் படியும் ஏற்கனவே உறுப்பினரானவர்களிடமிருந்து சந்தா பாக்கிகளும் வசூலிக்கப்பட்டன. மேலும் பயணக் கட்டணம் செலுத்தாதவர்களிடமிருந்து அக்கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போட்டிகள் துவங்கின. முதலில் மழலையர், சிறார்களுக்கான குர்ஆன் திலாவத் (கிராஅத்) போட்டி நடைப்பெற்றது. அல்ஹாஃபிழ் அபுல் ஹஸன் மக்கீ இப்போட்டியை நடுவராக இருந்து சிறப்பான முறையில் நடத்தினார். இப்போட்டியில் முதல் மூன்று பரிசுகள் சிறுவர் சிறுமியருக்காக தனித்தனியே ஒதுக்கப்பட்டிருந்தன.
அடுத்து ஆரவாரமான மியூசிகல் சேர் போட்டி குழந்தைகளுக்காக மட்டும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்கிப்பிங் போட்டி ஆடவருக்காக நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஒரே முறையில் அதிகமாக குதிக்கும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து முப்பது அடி தூரத்தில் நாட்டப்பட்ட ஒரு ஸ்டம்பை நோக்கி குறிவைத்து தாக்கும் பந்துருட்டும் போட்டி பெரியவர்களுக்காக நடத்தப்பட்டது. இதிலும் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன.
பெண்களுக்கான போட்டிகள் தனியே அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்து நடத்தப்பட்டது. PIN PIERCING, CUP TARING, STRAW STRINGING, PIN PRESSING, SHIP MAKING, BALL PASSING, PUZZLES PICKING, BALLOON BURSTING, LEMON IN THE SPOON AND QUIZ ஆகிய போட்டிகள் பெண்டிருக்காக நடத்தப்பட்டன.
அடுத்து ஆடவர் மற்றும் குழந்தைகள் நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் உஷ்ணம், பயணக் களைப்பு, தினசரி அலுவல்கள் முதலியவற்றால் சோர்ந்திருந்த பெரியவர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க முங்கிக் குளித்து பரவசத்துடன் காணப்பட்டனர். பல வகை பந்து விளையாட்டுகளும் நீச்சல் குளத்தில் நிகழ்ந்தன.
அடுத்து ளுஹர் தொழுகைக்கான அதான் கூறப்பட்டு ஜமாஅத்துடன் தொழுகை நடைப்பெற்றது. தொழுது முடித்ததும் அதே இடத்தில் KCGC செய்து வரும் பணிகள் குறித்து மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுபோன்ற சிற்றுலாக்களின் நோக்கம் நமக்கிடையே ஏற்படும் நெருக்கத்தை வைத்து ஊர்மக்களுக்கு சேவை செய்வதே எனவும் ஆகையால் வந்திருக்கும் ஒவ்வொருவரும் KCGC-யின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு வலுவாகச் செயல்பட உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் KCGC-ன் அடுத்த நிகழ்வாகிய சென்னைவாழ் காயலர்களின் பிள்ளைகளை சென்னையிலுள்ள IIT-க்கு அழைத்துச் செல்வதற்காக பெயர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.
விளையாட்டு, குளியல் என பற்பல நிகழ்விற்குப்பின் பசித்த உடல்களுக்கு அருசுவை உணவாக காயல் களரி சாப்பாடு உள்ளூர் வழக்கப்படி சகானில் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல உணவருந்தியதும் ஒரு சாரார் மலரும் நினைவுகளோடு மாமரத்தின் நிழலில் குட்டித்தூக்கத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மதியம் 4.00 மணியைத் தாண்டியதையடுத்து தோப்பிலிருந்து விடைப்பெற்று புலிக்குகை செல்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன் அஸ்ர் தொழுகையும் ஜமாஅத்துடன் தொழவைக்கப்பட்டு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொருவராக தாம் ஏற்கனவே வந்த பேரூந்துகளில் ஏறியதை அடுத்து மாலை 4.40 மணிக்கு பேரூந்துகள் புலிக்குகையை நோக்கி புறப்பட்டன.
மாலை 5.30 மணிக்கு புலிக்குகையை வந்தடைந்ததும் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த சுண்டல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அடுத்து புலிக்குகையின் அடர்த்தியான புல்வெளியில் ஓரிடத்தில் அனைவரையும் சங்கமிக்கச் செய்து அபூகார்டனில் காலையில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் முதல் மூன்றிடத்தை பிடித்தவர்களுக்கான பரிசளிப்பு விழா KCGC-யின் தலைவர் ஆடிட்டர் அஹமது ரிஃபாய், அதன் துணைத் தலைவர் ஸ்மார்ட் அப்துல் காதர், உறுப்பினரான அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்கள் பகுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு மேடையிலேயே வழங்கப்பட்டது. பெண்கள் பகுதியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட அப்பகுதியிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன.
கதிரவனின் அஸ்தமம் கொஞ்சம் கொஞ்சமாகத் துவங்கி இருள் படர ஆரம்பித்த வேளையில் சிற்றுலாவிற்கு வந்தோர் அனைவரும் குழுக்குழுவாக புலிக்குகையைச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பின்னர் அதன் பின்னால் அழகுரக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் கடற்கரைக்குச் சென்று அங்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதை அடுத்து நன்றாக இருள்சூழ ஆரம்பித்த வேளையில் இரவு 7.00 மணிக்கு புலிக்குகையிலிருந்து திரும்பி அவரவர் பேரூந்துகளில் ஏறி இரவு 8.45 மணிக்கு அனைவரும் தத்தமது இல்லத்தை சென்றடைந்தனர்.
புகழனைத்தும் படைத்துப் பரிபாலிக்கும் மேலோன் அல்லாஹ் ஒருவனுக்கே.
இவ்வாறு, KCGC சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை தெரிவிக்கிறது.
தகவல்:
ஹைதர் ஹுஸைன்
நிர்வாக அலுவலர் - KCGC.
KCGC அமைப்பின் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட வெளியரங்க ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |