காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – ‘மெகா’ சார்பில், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகராட்சியிடம் 238 கேள்விகள் ‘மெகா’ அங்கத்தினரால் கேட்கப்பட்டிருந்தது. விதிகளுக்குட்பட்டு 30 நாட்களுக்குள் அவற்றுக்கான விடைகள் கிடைக்கப் பெறாததால், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அக்டோபர் 25ஆம் நாள் – தகவலறியும் உரிமை நாளாகும். அதனை முன்னிட்டு, கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நாளன்று, காயல்பட்டினம் ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா’ சார்பில், அதன் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், “நகராட்சிப் பணிகளில் பொதுமக்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக வடிவமைத்து, அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் நகராட்சிக்குத் திரளாகச் சென்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்கேள்விகளை நகராட்சி தகவல் அலுவலரிடம் அளிக்க” தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், சென்ற ஜனவரி மாதம் 07ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில், ‘மெகா’ அங்கத்தினர் சுமார் 30 பேர் - அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சாளை நவாஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, பொது தகவல் அலுவலரான நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் - தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் 238 கேள்விகளை துறை வாரியாகப் பிரித்து, தனித்தனி உறைகளிலிட்ட கேள்விகளை சமர்ப்பித்து, அவற்றுக்கான ஒப்புகை முத்திரையைப் பெற்று வந்தனர்.
தகவலறியும் உரிமை சட்ட விதிமுறைகளின் படி, பிப்ரவரி மாதம் 06ஆம் தேதிக்குள் இக்கேள்விகளுக்கு நகராட்சி விடையளித்திருக்க வேண்டும். ஆனால் குறித்த கால அவசாகத்திற்குள் விடைகள் கிடைக்கப்பெறாததால், மேல்முறையீட்டு அலுவலரான நகராட்சி ஆணையரிடம் நேற்று (பிப்ரவரி 10ஆம் நாள்) காலை 11.30 மணியளவில் மேல்முறையீடு செய்ய - கேள்விகளைக் கேட்டிருந்த ‘மெகா’ அங்கத்தினர் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு குழுவாகச் சென்றனர்.
மேல் முறையீட்டுக் கடிதங்களை நேரடியாகப் பெற இயலாது என்று அப்போது மேல்முறையீட்டு அலுவலரும் - நகராட்சி ஆணையருமான ஜி.அஷோக் குமார் கூறிவிட்டார். நேரில் அளிக்கப்படும் மனுக்களையும் அதிகாரிகள் பெற வேண்டும் என அரசு விதி இருக்க, அவர் மனுக்களைப் பெற மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
மனுக்கள் நேரில் பெற மறுக்கப்பட்டதையடுத்து, அவையனைத்தையும் ஒப்புகைச் சீட்டுடனான பதிவு அஞ்சலில் (Registered Post with Acknowledgement) நகராட்சி மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு அலுவலரின் விடையும் கிடைக்கப்பெறாவிடில், கேள்விகளை சமர்ப்பித்த அனைவரையும் ஒருங்கிணைத்து, வரும் மார்ச் மாதம் 14ஆம் நாளன்று, சென்னையிலுள்ள - தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திடம் முறையிட ‘மெகா’ திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு, ‘மெகா’ செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |