காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 11ஆவது கலந்துரையாடல் கூட்டத்தில், ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 11ஆவது கலந்துரையாடல் கூட்டம், இம்மாதம் 08ஆம் நாள் சனிக்கிழமை 17.20 மணிக்கு, காயல்பட்டினம் ரஹ்மானிய்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் அனைவரையும் வரவேற்றார்.
காயல்பட்டினம் அருணாச்சலபுரம் - திருவள்ளுவர் மன்றம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 49ஆவது பொங்கல் விழாவையொட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. ஓவிய ஆசிரியரும், எழுத்தாளருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா இப்போட்டிக்கு நடுவராகப் பணியாற்றி, பரிசுக்குரியோரைத் தேர்வு செய்தார்.
அருணாச்சாலபுரத்தைச் சேர்ந்த பொறியியல் முதலாமாண்டு மாணவர் கா.முத்துமணி, அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பொறியியல் மாணவர் வி.கர்ணன், பத்தாம் வகுப்பு மாணவர் மா.பிரபஞ்சன் ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்று, அவ்விழாவில் பரிசு வழங்கப்பட்டனர்.
பரிசு பெற்ற இம்மூன்று மாணவர்களுக்கும், நடப்பு கூட்டத்தின்போது இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றம் சார்பில், அதன் கவுரவ ஆலோசகர்களான க.வில்சன், எல்.டி.இப்றாஹீம், ஓவியர் ஏ.எல்.எஸ்.லெப்பை ஸாஹிப் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஓவியம் வரையும் முறை குறித்த நூல், மாணவர் கல்விக் கடன் பெறுவதற்கான இணையதள முகவரிகள் அடங்கிய ஒளிப்படி ஆகியன பரிசுப் பொருட்களுடன் இணைத்து வழங்கப்பட்டன. நன்றியுரைக்குப் பின், துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 10ஆவது கலந்துரையாடல் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |