காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் பொறியியல் துறையின் கீழ் வருகின்றன. குடிநீர்
வழங்கும் பிரிவினை பொருத்துநர் நிசார் அஹமத் என்பவர் பிரதானமாக கவனிக்கிறார். இவரை தவிர - இரவு காவலாளி மற்றும் உயர் நிலை தொட்டி
பாதுகாவலர் பொறுப்பில் உள்ள பாஸ்கரன் என்பவரும், கருப்பசாமி என்ற கண்ணன் என்பவரும், ரோஜா சுய உதவிக்குழு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள மகேஷ்
என்பவரும், விவேக் என்பவரும் குடிநீர் விநியோகம் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வருவதாக தெரிகிறது.
சுமார் 8000 இணைப்புகள் உள்ளதாக கூறப்படும் காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரி சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மேல ஆத்தூரில் இருந்து
அனுப்பப்படுகிறது. இருப்பினும் - பல ஆண்டுகளாக, நகரின் குடிநீர் விநியோகம் பிரச்சனைக்குரியதாகவே இருந்து வருகிறது.
இணைப்புகள் எண்ணிக்கை, அரசு திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவு ஆகியவற்றின்படி - இரண்டு நாளைக்கு ஒரு முறை வழங்க போதுமான தண்ணீர் இருக்க - நகரின் உட்பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும், பல புறநகர் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் தான் குடிநீர்
வழங்கப்பட்டு வருகிறது.
புதிய நகர்மன்றம் 2011 இல் பதவியேற்றப்பின் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், சென்னையில் அப்போதைய தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS யை சென்னையில் சந்தித்து, அந்நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குழு ஒன்று காயல்பட்டினம் நகர்மன்றதிற்கு வருகைப்புரிந்து விவரங்கள் கேட்டறிந்தது.
அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS - நகரில் குடிநீர்
விநியோகத்தை மேம்படுத்த - தனது வாரியத்தின் ஐந்து பரிந்துரைகளை - நகர்மன்றத் தலைவருக்கு வழங்கினார்.
முதல் பரிந்துரையே - சட்டத்திற்கு புறம்பான இணைப்புகளை துண்டிப்பது ஆகும்.
அந்த பரிந்துரைகளை தொடர்ந்து - மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு போன்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீர் விநியோகத்தில் அவை
பெரிய அளவில் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை.
இதற்கிடையில் நகரில் தற்போது இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்படி - நகரின் அனைத்து
இல்ல இணைப்புகளும் புதிதாக வழங்கப்படும். இந்த புதிய இணைப்புகளை பெற - பொதுமக்கள், குடிநீர் வரி பாக்கி எதுவும் வைத்திருக்கூடாது
என்றும், தாங்கள் இறுதியாக கட்டிய ரசீது அடிப்படையில் தான் - இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்புகள் பெறமுடியும் என்றும்
நகராட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
(சில ஆண்டுகளுக்கு முன்னர் - குடிநீர் கட்டணத்தை நகராட்சி உயர்த்தியதை தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குடிநீர் கட்டணம்
செலுத்தவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்தது. அதனை தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத பலரின் பாக்கி சுமார் 50 லட்சம் ரூபாய்
உள்ளது).
சமீபத்தில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், நகர்மன்ற அதிகாரிகள் சிலர் - நகரின் வடப்பகுதியில்
குடிநீர் இணைப்புகள் குறித்து ஆய்வுகள் செய்ய சென்றுள்ளனர். அப்போது - நகர்மன்றத் தலைவர், குடிநீர் இணைப்புகளுக்கான ரசீதுகளின் அவசியம்
குறித்து பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அவ்வேளையில் - பொதுமக்களில் ஒருவர், தான் 2007 ம் ஆண்டிலேயே சுமார் 10,000 ரூபாய் கட்டி இணைப்பு பெற்றதாகவும், ஆனால் தனக்கு
இதுவரை ரசீது வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருவர் - தான் வருட குடிநீர் வரியை கட்ட நகராட்சி அலுவலகத்திற்கு
செல்லும்போது எல்லாம், அங்குள்ளவர்கள் - தங்கள் பெயரில் எந்த பதிவும் இல்லை என்றும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாரிடம் பணம் கொடுத்தீர்கள் என நகர்மன்றத் தலைவர் வினவியதற்கு, அவ்விடத்தில் இருந்த - நிரந்தர ஊழியர் ஒருவரையும், ஒப்பந்தப்பணியாளர்
ஒருவரையும் - பொது மக்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.
அந்த பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் விசாரித்ததில் - சில காரணங்களுக்காக கணினியில் பதிவேற்றம் செய்யமுடியவில்லை என்றும்,
விரைவில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இணைப்பு ஒன்றுக்கு 10,000 ரூபாய் பெற்று - நகராட்சியில் செலுத்தப்படாமல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது. இது போல்
நகரில் பல இணைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த மதிப்பீடாக 100 இணைப்புகள் இது போன்ற முறையில் வழங்கப்பட்டிருந்தாலும்
நகராட்சியின் இழப்பு சுமார் 10 லட்ச ரூபாய்! வருட குடிநீர் வரி - 600 ரூபாயும், பல ஆண்டுகளாக இது போன்ற இணைப்புகள் மூலம்
வசூலிக்கப்படாமல், நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என
தெரிகிறது.
இது ஒரு புறம் இருக்க - நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவினை கணிக்கிட அளவு கருவி பொறுத்த - கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்மன்றத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 3.2 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான அளவு கருவி பொருத்தும் பணிக்கு
இருவரிடம் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளி, ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தில்
ஒரு பொருளாக இடம்பெற்றிருந்தது. அந்த கூட்டத்தையும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி
நடைபெற இருந்த கூட்டத்தையும் பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்ததால் இது குறித்த தீர்மானம் நிறைவேறவில்லை.
இருப்பினும் - இது குறித்து நகர்மன்றத் தலைவரும், பெருவாரியான உறுப்பினர்களும் முன் அனுமதி வழங்கவே, அதன் அடிப்படையில்,
இப்பணிக்கான வேலை ஆணை (WORK ORDER), குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்த RESI ENGINEERING என்ற மதுரை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இப்பணி குறித்து ஒப்பந்ததாரரிடம் கடந்த செப்டம்பர் மாதம் காயல்பட்டணம்.காம் வினவியப்போது, ஒரு மாதத்தில் பணிகளை முடிப்பதாக தெரிவித்திருந்தார்.
பணி ஏதும் நடைபெறாததால், காயல்பட்டணம்.காம் இது குறித்து ஒப்பந்தாரரிடம் - டிசம்பர் மாதம் வினவியது. அவ்வேளையில் - இப்பணிக்கான
பொருட்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆவதாகவும், பொங்கல் விடுமுறைகளுக்கு பின்னர் பணிகள் முடிக்கப்படும் என்றும் ஒப்பந்ததாரர்
தெரிவித்திருந்தார்.
பிப்ரவரி மாதம் துவங்கியும் பணி துவங்காததால், காயல்பட்டணம்.காம் - ஒப்பந்ததாரிடம் மீண்டும், கடந்த வாரம் வினவியது. பொருட்கள் மதுரை
வந்துவிட்டதாகவும் - திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று பணிகள் நடக்கும் என்றும் கூறினார். திங்கட்கிழமையும் பணிகள் துவங்கவில்லை. இது
குறித்து மீண்டும் விசாரித்ததில் - வெள்ளிக்கிழமை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பணிகளை விரைவுபடுத்த - நகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரரை எந்த நிர்பந்தமும் செய்ததாக தெரியவில்லை. விரைவாக அளவு கருவி
நிறுவப்படுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும், முறையில்லாத இணைப்புகள் பல வழங்கப்பட்டு வருவதும் - நகரின் குடிநீர்
விநியோகத்தில் பெரும் அளவில் முறைக்கேடு நடந்து வருவதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00 am / 13.02.2014] |