பழனி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் போக்குவரத்து பிப்ரவரி 16-ம் தேதி முதல் துவங்குவதாக, மதுரைக்கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தெரிவித்தார்.
மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் 14-வது ஆலோசனைக்குழுக் கூட்டம் புதன்கிழமை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி பேசியது:
மதுரைக் கோட்ட ரயில்வே நடப்பு ஆண்டில் ரூ.418.42கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு வருவாயான ரூ.369.70 கோடியை விட கூடுதலாகும். பயணிகள் போக்குவரத்து மூலம் கோட்டத்தில் வருவாய் ரூ.285.52 கோடியாகும். முந்தைய ஆண்டு இந்தவகையில் கிடைத்த வருவாய் ரூ.237.07.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப மதுரைக்கோட்டத்தில் போதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்னக ரயில்வேயில் சென்னை எழும்பூர்-பழனி விரைவு ரயில் உள்ளிட்ட பல புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி-திருநெல்வேலி பயணிகள் ரயில் போக்குவரத்து 6 நாள்களில் இருந்து வாரம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு-நாகர்கோவில் இடையே புதிய விரைவு ரயில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழனி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் பிப்ரவரி 16-ம் தேதி பழனியிலிருந்து துவக்கி வைக்கப்படவுள்ளது.
கோட்டப்பகுதியில் ரூ.5.4 கோடியில் பயணிகளுக்கு கூடுதல் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில் பயணிகளின் வசதிக்காக மதுரை சந்திப்பில் பிளாட்பாரங்களில் 6 எஸ்க்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் விரைவில் 2 எஸ்க்லேட்டர் வசதி செய்யப்படவுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி பிளாட்பாரங்களில் லிப்ட் வசதியும் செய்யப்படவுள்ளது
- என்றார்.
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் என்.ஜெகதீசன், பாலசுப்பிரமணியன், ஏ.பாலன், ஏ.கோபிக்கண்ணன், எம்.பிரம்மநாயகம், ஆர்.சீனிவாசன், எஸ்.தனவேலு, கேஆர்வி ராஜேந்திரன், முதுநிலை ரயில்வே பிஆர்ஓ என்.வேணுகோபால் உள்ளிட்ட உறுப்பினர்கள், ரயில்வே அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் வி.அஜித்குமார் வரவேற்றுப் பேசினார். முதுநிலை கோட்ட வணிக மேலாளர் கோவிந்தப்பாராஜ் நன்றி கூறினார்.
தகவல்:
தினமணி |