கத்தர் காயல் நல மன்றம் சார்பில், இம்மாதம் 22ஆம் நாளன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON நிகழ்ச்சியும், 23ஆம் நாளன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் அஸ்லம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
நமதூர் காயல்பட்டினத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இயல்பை விட அதிகளவில் உள்ளது. சர்க்கரை நோய் குறித்து போதிய விழிப்புணர்வின்மையே இதற்கான முதன்மைக் காரணமாக அறியப்படுவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வூட்டும் செயல்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த மன்றத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நகரிலேயே முதன்முறையாக - இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 22.02.2014 சனிக்கிழமையன்று மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் அருகில் - மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவிலிருந்து WALKATHON பேரணி புறப்பட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் அன்று 05.30 மணிக்கு நிறைவடையும்.
இந்த WALKATHON நிகழ்ச்சியை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கு - சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வூட்டும் படம் வரையும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்து 6, மாணவியரிடமிருந்து 6 என மொத்தம் 12 சிறந்த ஓவியங்கள் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை - WALKATHON நிறைவில் காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
மறுநாள் 23.02.2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 07.00 மணி முதல் நண்பகல் 11.00 மணி வரை, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி, ரிஸ்வான் சங்கம், கோமான் நடுத்தெரு, சதுக்கைத் தெரு பெரிய சதுக்கை ஆகிய 4 இடங்களில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் துணையுடன் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்படவுள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நிறைவான நலவாழ்வைத் தந்தருள்வானாக...
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |