மக்களவையில் கட்டண உயர்வில்லா ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார்.
கார்கே தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு கார்கே ஒப்புதல் கோரினார்.
இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் மொத்தம் 72 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கூடுதல் கட்டணம் கொண்ட 17 பிரிமீயம் ரயில்களும், 38 விரைவு ரயில்களும் அடங்கும்.
தமிழகத்திற்கான விரைவு ரயில்கள்:
தமிழகத்திற்கு 3 விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் இருந்து பெங்களுருக்கு தினசரி விரைவு ரயில்
* சென்னையில் இருந்து மும்பைக்கு குல்பர்கா வரை வாராந்திர விரைவு ரயில்
* நாகர்கோவிலில் இருந்து நாமக்கல் வழியாக ஆந்திராவின் கச்சிகுடாவுக்கு வாராந்திர விரைவு ரயில்.
* மன்னார்குடி - ஜோத்பூர் வாராந்திர விரைவு ரயில்.
ப்ரீமியம் ரயில்கள்:
* சென்னையில் இருந்து அசாமின் காமாக்யாக்வுக்கு ஏ.சி. வசதி கொண்ட வாராந்திர ப்ரீமியம் ரயில்
* ஈரோடு, திருப்பத்தூர் வழியாக திருவனந்தபுரம் - பெங்களூரு இடையே வாரம் இருமுறை செல்லும் ப்ரீமியம் விரைவு ரயில்.
தமிழகத்துக்கான பயணிகள் ரயில்கள்:
* திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில்
* மயிலாடுதுறை - மன்னார்குடி தினசரி பயணிகள் ரயில்
* புனலூர் (கேரளா)- கன்னியாகுமரி இடையே தினசரி பயணிகள் ரயில்.
கட்டண உயர்வு கிடையாது:
பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் கார்கே, பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் உயர்த்தப்படாது என தெரிவித்தார். ரயில்வே துறையின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், 2000 கி.மீ. இருப்புப்பாதை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால் 2,207 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில்வே இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ரயில்வே ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
புதிய திட்டங்கள்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கட்டாராவுக்கு பயணிகள் ரயில், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு ரயில் சேவை அளிப்பது, வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகள் வசதிக்காக ரயில் சேவையை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல திட்டங்களை அவர் முன்வைத்தார். மேலும், கூடுதலாக அதி வேக ரயில்கள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
ரயிலில் விபத்துகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, ரயிலில் மின் கசிவு ஏற்படுவதை தடுக்க மின் ஒயர்கள் பல் அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக அமைக்கப்படும். தீ விபத்தை தடுக்க ரயிலில் ஏசி பெட்டிகள், சமையலறை உள்ள பெட்டி, ரயில் கார்ட் பெட்டிகளில் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்படும், ரயில் சமையலறையில் காஸ் அடுப்புகளுக்கு பதிலாக மின்சார அடுப்பு மூலம் உணவுகள் சமைக்கப்படும், பார்சல்களில் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் அனுப்பப்படுகிறதா என பல முறை சோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
தொழில்நுட்ப மேம்பாடுகள்:
ரயில் பயணிகள் வசதிக்காக ரயில்வே துறை படிப்படியாக பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த முறையும் தொழில்நுட்ப மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக பட்டியலிட்டார். அதன்படி, முன் பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை மொபைல் தொலைபேசி மூலம் பெற புதிய வசதியை அறிமுகப்படுத்துதல், பயணிகளின் காத்திருப்போர் பட்டியலின் (பி.என்.ஆர்.) நிலவரம் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளித்தல்,
குறிப்பிட்ட ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்களில் உணவை ஆன் லைனில் முன்பதிவு செய்ய வசதி, அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தங்கும் அறைகளை ஆன் லைனில் முன் பதிவு செய்யும் வசதி ஆகியன ஏற்படுத்தித் தரப்படும் என தெரிவித்தார்.
தகவல்:
தி இந்து
|